OUR CLIENTS
பட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை!
பட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை! Posted on 09-May-2017 பட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை!

சென்னை, மே 9-
சென்னையில் அதிகாலையில் போலி மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதை கண்டும் காணாமல் காவல் துறை அமைதி காத்து வருகிறது.

சென்னை வடபழனி அடுத்துள்ள கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில், அரும்பாக்கத்தில் காலை 5 மணிக்கே போலி மது விற்பனை அமோகமாக தொடங்குகிறது. தினமும் இப்படியே விற்பனை நடக்கிறது. தமிழகத்தில் மதுக்கடைகளை (டாஸ்மாக்) திறக்க கூடாது என்று தமிழக மக்கள் போராட்டங்களை தீவிரமாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் ஒருபுறம் சத்தமில்லாமல் இதுபோன்ற விற்பனை காவல் துறை ஆசியோடு நடந்து வருகிறது. இந்நிலையில், அரும்பாக்கத்தில் கடை எண்.25 செந்தில் நகரில் மட்டும் நீதிமன்ற உத்தரவை மீறி மதுக்கடை செயல்படுகிறது. அதாவது கடை மூடி மூடாமல் இருக்க காரணம் என்ன? இந்த கடை பார் உரிமையாளர் பெரிய அப்பா டக்கராம். இவர் இந்த ஏரியாவில் பெரிய புள்ளியாம். 

அதாவது சமுதாயத்தில் இவர் ஒரு கரும்புள்ளி. இவரை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நெஞ்சு கொதிக்கின்றனர். ஆனால் இவரை யாரும் தட்டிக் கேட்க கூட முடியாதாம். காவல் துறையில் பணியாற்றுவோரும் இவரிடம் மண்டியிட்டு மாமூல் பெற்றுச் செல்கிறார்களாம். இவர் இங்கு வரும் சூளைமேடு காவல்நிலையத்தில் பணியாற்றுவோருக்கு தாராளமாக மாமூல் கொடுத்து சரிகட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது. இவரிடம் மாமூல் வாங்கும் காவல் துறையில் பணியாற்றுவோர் கைகட்டி, வாய்பொத்தி, மண்டியிட்டு மாமூல் வாங்கிச் செல்கிறார்களாம். கள்ளச்சாராயம் காய்ச்சி இதில் கலர் எசென்ஸ் கலந்து மதுபுட்டிகளில் அடைத்து மதுபோன்று விற்பனை செய்கின்றனர். இதுதயாரிக்க போலி சாராய ஆலை நடந்து  வருகிறது. போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் எங்குள்ளார்கள் என்பதே தெரியவில்லை.

இதனால் இவர் எப்பொழுதும் போல் அதிகாலை 5 மணிக்கே கடையை திறக்காமலே மதுவை விற்பனை செய்கிறார். இதை தட்டிக் கேட்க முடியாமல் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இதுபோல் நாமும் கடையை திறக்க என்ன வழி என்று இவரிடமே ஆலோசனை கேட்கின்றனராம் பல சாராய சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்கள். உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை காற்றிலே பறக்கவிட்டு விட்டு கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு இவர் விற்பனை செய்கிறார். இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய காவல் துறை இவரிடமே மண்டியிட்டு, பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருவது காவல் துறையினர் அணிந்துள்ள தொப்பியில் உள்ள சிங்கத்துக்கு அசிங்கமாகும், இழுக்காகும். இதுபோன்ற சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியவர்கள் அவரது முன்பே நின்று இறந்துண்டு வாழ்வது ஏற்புடையதாக இல்லை என்று பொதுமக்கள் கொதிக்கின்றனர். 

கடமை தவறாமல் தன்குடும்பம் மறந்து பல காக்கிகள் பணிபுரிகின்றனர். அவர்களை அவமானப்படுத்தும் வகையில் சில காக்கிகள் பணத்தாசை பிடித்தவர்களாக இருந்தாலும் கடமையை மறந்து இப்படி தரம் தாழ்ந்து நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி மனது வருகிறது என்பது ஆச்சரியமான விஷயமாகும். பணத்துக்காக எதையும் செய்ய காவல் துறை துணிந்துவிட்டது என்பது மட்டும் இன்று புலப்படுகிறது. 

குற்றம் செய்பவர்களைவிட அதற்கு உடந்தையாக செயல்படுவர்கள் தான் முதலில் தண்டிக்கப்படவேண்டும். ஆதலால் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை தயவு தாட்சண்யமின்றி களையெடுக்க காவல் துறை முன் வர வேண்டும். நீதிமன்றமும் அதுபோன்று அதிகார துஷ்பிரயோகம் செய்யும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. திறந்தவெளியில் பார் நடத்துவோரை தண்டிக்காமல் விடக்கூடாது. இவர் மீது என்னதான் நடவடிக்கை பாய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Label