OUR CLIENTS
இருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா?
இருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா? Posted on 07-May-2017 இருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா?

கிருஷ்ணகிரி, மே 7-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு நேரம் என்றாலே இருசக்கர வாகன சோதனையை விட்டால் வேறு எதையும் போலீசார் செய்வதில்லை. இதனால் பொதுமக்கள் எரிச்சலடைந்து காணப்படுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றுவோர் பகல், இரவு வேளைகளில் வாகன சோதனையில் மட்டுமே ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை இருந்து கொண்டே உள்ளது. காவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. ஆனால் இதையெல்லாம் விட்டு விட்டு வாகன சோதனையிட்டு கல்லா கட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பணம் வரும் வேலையை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்கின்றனர்.

ஆனால் செய்து முடிக்க ஆயிரம் வேலை இருந்தாலும் அவற்றையெல்லாம் இந்த பணத்துக்காக புறந்தள்ளி விட்டு 10 பேர் கொண்ட கும்பல் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் லாபம் என்பதால் அனைவரும் ஆர்வமுடன் பணியாற்றுகின்றனர். ஆனால் இதே குற்றவாளியை கைது செய்ய வேண்டும். சம்மன் சர்வ் செய்ய வேண்டும். வழக்கு முடிக்க வேண்டும். திருட்டு, கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற கிரிமினல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய காவலர்க் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல வழக்குகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேங்கி கிடக்கிறது. 

இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இவர்களை மேற்பார்வையிடும் டிஎஸ்பி இருக்கையை விட்டு அகலுவதே இல்லை. இப்படி இருந்தால் காவல் துறை எப்படி சிறப்பாக பணியாற்ற முடியும். நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முடியும். ஆதலால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்து குற்றம் நாட்டில் பெருகாத வகையில் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி வாகன தணிக்கையில் கும்பலாக நின்று கொண்டிருப்பததை காட்டிலும் இரவு ரோந்து சென்றால் திருடர்களாவது திருட வராமல் இருப்பார்கள். எல்லாம் தெரிந்திருந்தும் சுயநலவாதிகளாகவே காவல் துறையினர் செயல்படுகின்றனர். பொதுநலம் காவல் துறையினரிடம் இப்போது அடியோடு குறைந்து விட்டது. புகார் கொடுக்க காவல் நிலையம் செல்வோரை மரியாதை குறைவாக நடத்துவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். 

மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாமல் காவல் துறையில் சில காக்கிகள் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே கருணையின் நிறம் காக்கி என்பதற்கு இலக்கணமாக திகழ்கின்றனர். ஆதலால் இனிவரும் காலங்களில் வாகன தணிக்கையில் மட்டும் தனிக்கவனம் செலுத்தாமல் அனைத்து பணிகளையும் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மற்றும் டிஐஜி ஆகியோர் அடிக்கடி சட்டம்&ஓழுங்கு தொடர்பாக கூட்டங்கள் நடத்துகின்றனர். 

அப்போது மாவட்டத்தில் உள்ள குற்றவழக்குகள் விவரங்களை கேட்டறிவதோடு சரி, காவல் துறை வாகனங்களை ஆய்வு செய்யும் போதும் சரி ஏதோ கடமைக்காக பார்வையிட்டு சென்றுவிடுகின்றனர். உண்மையில் அங்குலம் அங்குலமாக பார்த்து ஆய்வு செய்தால் ஒரு காவல் துறை வாகனமும் முறையாக பராமரிப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகும். காவல் துறையில் மனசாட்சிக்கு பயந்து பணியாற்றுவோர் மட்டுமே நீண்ட ஆயுளுடன் உள்ளனர்.

போலீஸ் பொதுமக்களுக்கு நண்பன் என்பதை பெயரளவில் மட்டும் இருக்காமல் நடைமுறையில் பின்பற்ற காவல் துறையில் பணியாற்றும் இளைய தலைமுறைக்கு உயரதிகாரிகள் கற்றுத்தந்தால் நலன் பயக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள். இனி வருங்காலங்களில் காவல் துறையின் நடவடிக்கை எப்படி உள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label