OUR CLIENTS
உள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்!
உள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்! Posted on 06-May-2017 உள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்!

வேலூர், மே 6-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் நடத்த ஆயத்தமானார்கள். ஆனால் பல்வேறு காரணங்களை காண்பித்து தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு பலர் பணத்தை தண்ணீராக செலவு செய்தனர். இதில் பலர் வீணாக செலவு செய்ததை எண்ணி நொந்தும் போனார்கள். இந்த தேர்தலில் தங்களது கட்சி பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுக, திமுக, காங்., பாமக, தேமுதிக, மதிமுக, தமாகா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூ. மற்றும் மார்க்சிய கம்யூ.,கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் களம் இறங்கின. இந்நிலையில்  அந்த இடத்தில் மீண்டும் யார் யார் போட்டியிட போகிறார்கள் என்பது மதில்மேல் உள்ள பூனை போல உள்ளனர். மீண்டும் ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட உள்ளது.

இதனால் பல வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். நாம் கடந்த தேர்தலில் செய்த செலவு, கடந்த 5 ஆண்டுகள் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் ஆகியவற்றை சொல்லி மீண்டும் தேர்தலில் போட்டியிட பல வேட்பாளர்கள் மனக்கணக்கு போட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் இந்த பிரச்னை பெருமளவில் கட்சி தலைவர்களுக்க மனப்புழுக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது. ஆரவாரமின்றி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பல முறை கட்சி தலைவர்களுக்கு வேட்பாளர்கள் தரப்பில் அழுத்தம் கொடுத்தும் தலைவர்கள் கண்டும் காணாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த முறை நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக செயல்படுவதால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக இந்த உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது அதிக இடங்களை கைப்பற்றி தனது கட்சியின் அருதி பெரும்பான்மையை நிரூபிக்க முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அப்படி உள்ளாட்சியில் பெரும்பான்மை கிடைத்து விட்டால் அதையே காரணமாக பயன்படுத்தி அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் முனைப்பை திமுக செயல்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

இதுதான் திமுகவின் மாஸ்டர் பிளான் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்காக கடந்த 3 மாதங்களாக  பணி நடந்து வருகிறது. காங்., பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகள்  கூட்டணி வைக்கலாமா அல்லது தனியாக போட்டியிடலாமா என்று யோசித்து வருகின்றன. எது எப்படியோ எடப்பாடி பழனிச்சாமி  ஒரு அணியாகவும், ஓபிஎஸ் அணி ஓரு அணியாகவும் போட்டியிட உள்ளது. பிற கட்சிகளும் தனித்து போட்டியிடவே ஆர்வம் காட்டுகின்றன. இது அதிமுக ஓரங்கட்டப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு திமுக பணியாற்றி வருகிறது.

இந்த ஓட்டப்பந்தயத்தில் யார் முந்துவது என்பது போகப் போகத் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன என மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு வார்டு வாரியாக வாக்காளர் பட்டி யலை தயாரிப்பது குறித்தும், வாக்குச்சாவடி பட்டியல் விவரம், அதில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டியது வருமா என்பது குறித் தும், தேர்தல் பணியில் ஈடுபடுத் தப்படும் அலுவலர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதன் தேவை குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலைப் பிரித்து சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 

எஞ்சிய பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும். டெபாசிட் தொகை உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் 100 சதவீதம் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிப் பகுதிகளில் டெபாசிட் தொகை குறைவு என்பதால், அதை திரும்பப் பெறாமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து, டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றார். விரைவில் யாருக்கு பிரகாசமான எதிர்காலம் என்று உள்ளாட்சி தேர்தலில் பலத்தை நிரூபித்து பெற கட்சிகளும் முனைப்போடு செயல்பட தொடங்கியுள்ளன. முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label