OUR CLIENTS
அடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்!
அடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்! Posted on 04-May-2017 அடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்!

கிருஷ்ணகிரி, மே 4-
கிருஷ்ணகிரியில் அடிப்படை வசதியில்லாத பள்ளியில் சிக்கித் தவிக்கும்ய மாணவர்கள் சொல்லொனாத் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் தொட்டகாரனப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் என்பது ஏதும் இல்லை என்றே அடித்து சொல்லலாம். அந்தளவுக்கு பள்ளியின் அவல நிலையை சொல்லி மாளாது. 

இந்த பள்ளியில் இந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் முன்னூறு பெண்கள் மற்றும் ஆண்கள் படிக்கின்றனர். ஆறு கிராமங்களில் இருந்து இந்த பள்ளிக்கு வந்து கல்வி பயில்கின்றனர். ஆனால் அடிப்படை வசதி கூட இல்லாமல் சிரமப்படுகின்ற நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. பல ஆட்சிகள் மாறின. 

ஆனால் காட்சி மட்டும் மாறவேஇல்லை. இவர்கள் வாழ்வில் வசந்தம் வந்தபாடில்லை. கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனப் போக்கில் செயல்படுகின்றனர். மாவட்ட கல்விஅலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என்று பொறுப்புகளை வாங்கி வைத்துக் கொண்டுள்ள அதிகாரிகள் கிராம மாணவ, மாணவிகள் நலனில் துளி கூட அக்கரை செலுத்துவது இல்லை. 

இந்த பள்ளிக்கு வந்து செல்ல நல்ல தரமான சாலை வசதி இல்லை. பள்ளிக்கு வந்து விட்டால் மாணவ, மாணவிகள் அருந்துவதற்கு நல்ல சுத்தமான சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் இல்லை. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சுத்தமாக போக்குவரத்து வசதியும் இல்லை. பள்ளிக்கு வரும் பிள்ளைகள் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவு நடந்து வந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பலவானாலும் இவர்களது வாழ்வில் இன்னமும் சுதந்திரம் வந்தபாடில்லை. கல்வித்துறையில் பணியாற்றுவோர் அவர்களது பிள்ளைகளை இப்படி கல்வி பயில கல்விக்கூடங்களுக்கு அனுப்பி வைப்பார்களா?. யாரோ மாணவ, மாணவிகள் என்று அலட்சியம் காட்டுகின்றனர். அனைத்து குழந்தைகளையும் தங்களது குழந்தைகள் போன்று பாவிக்க ஏனோ கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் மறந்து விட்டனர்.

தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்குதான் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் அந்த நிதியை அடிப்படை வசதியில்லாத இதுபோன்ற பள்ளிகளுக்கு வாங்கித்தர ஏனோ கல்நெஞ்சம் படைத்த அதிகாரிகள் முன்வருவதே இல்லை. இவர்கள் தங்களுக்கு மாத ஊதியம் கிடைத்தால் போதும், கிம்பளம் கிடைத்தால் போதும் என்று செயல்படுகின்றனர். இவர்களது குழந்தைகள் மட்டும் செல்வச்செழிப்பில் படித்தால் போதும் என்ற சுயநலத்தோடு செயல்படுகின்றனர். யாராவது எப்படி போனால் நமக்கென்ன என்று இருக்கின்றனர். 

இதுபோன்ற அதிகாரிகள் மாற வேண்டும். இல்லையெனில் இனி ஒரு சுதந்திரம் வர வேண்டும். அப்போதுதான் கிராமங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மறுமலர்ச்சி பெறும். மாணவர்கள் வாழ்வில் உள்ள இருள் நீங்கி ஒளி பிறக்கும். அதிகாரிகள் திருந்துவார்களா? அல்லது நாய் வால் போன்று மீண்டும் பழைவாறு செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையை மனதில் கொண்டு அரசு தரும் வசதிகளை கல்வித்துறையில் இருந்து கிராம பள்ளிகளுக்கு பெற்றுத்தர முன்வர வேண்டும் என்பதே கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடு என்னவாக இருக்கும் என்பதை போக போக தெரிந்து கொள்ளலாம்.

Label