OUR CLIENTS
மணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்!
மணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்! Posted on 02-May-2017 மணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்!

வேலூர், மே 2-
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டதால், கட்டுமான துறையைச் சார்ந்த, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவோடு இரவாக டாரஸ் லாரிகளில் மணல் கடத்தல் தொழில் படு ஜரூராக நடந்து வருகிறது.

தமிழகத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வந்த, 38 குவாரிகளின், சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியானதால், ஒன்பது குவாரிகள் மட்டும் செயல்பட்டு வந்தன. அவை, ஏப்., 28 நள்ளிரவுடன் மூடப்பட்டன.தொடர்ந்து, மணல் விற்பனைக்காக, தனியார் ஒப்பந்ததாரர்கள் நடத்தி வந்த யார்டுகளும் மூடப்பட்டன. இதனால் குவாரிகளில் இருந்து லாரிகள், ஜே.சி.பி., இயந்திரங்கள், யார்டுகளில் இருந்த, ஒப்பந்ததாரர்களின் வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, விற்பனையாளர்களிடம் இருப்பில் உள்ள மணல், மூன்று நாட்கள் தேவைக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும்.

பின், மணல் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அனைத்து கட்டுமான பணிகளும் முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமான துறை சார்ந்த, ஐந்து லட்சம் பணியாளர்கள், வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், ஒரு நாளைக்கு, 40 ஆயிரம் லோடு மணல் தேவை. குவாரிகள் மூடப்பட்டதால், கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கிவிட்டன. ஆற்று மணலுக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படும், ‘எம் சாண்ட்’ எனப்படும், கிரஷர் துகள்கள் போதுமானதாக இல்லை. தமிழக அரசு தலையிட்டு, உரிய தீர்வு காண வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க இரவு நேரங்களில் திருட்டு மணல் கடத்தல் தொழில் படு ஜரூராக நடக்க ஆரம்பித்துள்ளது. ஒருலாரி லோடு மணல் ரூ.18,000 முதல் ரூ.22,000 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

டாரஸ் லாரிகள் இரவு நேரங்களில் இயக்கப்படுகின்றன. ஆற்றில் நாக்கை போட்டு நக்கி எடுத்தாற் போல மணல் அடியோடு சுரண்டி எடுக்கப்படுகிறது. இதை இரவு நேரங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்தும், மணல் கடத்தும் வாகன ஓட்டுநர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் முன் வர வேண்டும். மாவட்ட ஆட்சியர் ராமன் கனிம வளத்தை சுரண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் மாவட்ட வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்த முன்வர வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடுவோர்தான் இன்று ஊரில் பெரிய மனிதர்களாக வலம் வருகின்றனர். இதுபோன்ற இயற்கை வளங்களை சுரண்டுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காவல் துறை ஒருபுறம் மணல் லாரிகள், மணல் லோடு ஏற்றிச் செல்லும் டயர் வண்டிகளை இரவு நேரத்தில் தடுத்து நிறுத்தி ஒரு வாகனத்துக்கு லாரி என்றால் ரூ.500, டயர் வண்டிகள் என்றால் ரூ.200 என்று மாமூல் வாங்கிக் கொண்டு விட்டுவிடுகின்றனர். இதனால் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.  நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மணல் ஆற்றில் குறைய குறைய நீராதாரம் அதலபாதாளத்துக்கு சென்று விடும் பேராபத்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதை உணராமல் அரசு துறையில் பணியாற்றுவோர் கடமையை மறந்து லஞ்ச பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டுக்கு துரோம் இழைக்க கூடாது.

காவல் துறையில் பணியாற்றும் காவல் இளைஞர் படையினரும் வசூல் வேட்டையில் போலீசாரை மிஞ்சி விட்டனர். இவர்கள் மாமூல் வாங்கி மொத்தமாக பணி முடிந்து வீடு திரும்பும்போது பங்கு பிரித்து செல்கின்றனர். இயற்கை வளங்களை சுரண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வேளையில் மாவட்ட அதிகாரிகள் நாட்டின் நலனில் அக்கரை கொண்டு நிலைமை சீராகும் வரை இரவு ரோந்து வந்தால் நாடு காக்கப்படும்.

இல்லையெனில் முழுவதுமாக சுரண்டி சொத்து சேர்த்து கொள்வார்கள் சமூக விரோதிகள். ஆதலால் இரவு நேரத்தில் சத்தமின்றி நடைபெறும் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

Label