OUR CLIENTS
நீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது!
நீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது! Posted on 01-May-2017 நீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது!

திருவள்ளூர், மே 1-
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தொகுதியில் உள்ள பெரும்பாக்கம் ஏரியில் கழிவு நீர் சேகரமாகி கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக ஏரி,குளங்களை தூர் வார உத்தரவு வெளியிட்டது.

ஆனால் இதுநாள்வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி மிகவும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தான்தோன்றி தனமாக நடந்து கொள்கிறார். இவர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமலும், செயல்படுத்தாமலும் உத்தரவை காற்றிலே பறக்கவிட்டு விட்டு அமைதி காத்து வருகிறார். 

குளிரூட்டப்பட்ட அறையை விட்டு அவர் வெளியில் வருவதே இல்லை. இருக்கையில் சூடேற்றிக் கொண்டு இருப்பதுதான் மாவட்ட ஆட்சியரின் பணியா? என்ற கேள்வியை கேட்கச் சொல்கிறது. இவரது செயல்பாடு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை எரிச்சலடையச் செய்துள்ளது. இதுபோன்ற செயல்படாத மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும். குறிப்பாக கொரட்டூர் ஏரி, திருநின்றவூர் ஏரி, ஆவடி ஏரி ஆகியவற்றில் கழிவு நீர் கலக்கப்பட்டு கருமை நிறமாக மாறி இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வெற்றியும் பெற்றனர். 

இதேபோல் வயலாநல்லுர் ஈசா ஏரியை சில சமூக விரோதிகள் கூறு போட்டு வீட்டுமனைகளாக விற்பனை செய்து வருகின்றனர். இதை வலியுறுத்தி பல முறை அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தியும், மனுக்கள் வழங்கியும் இதுவரை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியர் காட்டி வருகிறது. இப்படி மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் இருந்து வருகிறார். இதனால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் போராடி ஒவ்வொன்றையும் பெறவேண்டி உள்ளது. ஏன் மாவட்ட ஆட்சியர் எந்த வேலையும் செய்வதில்லை. இவருக்கு என்னதான் வேலை என்று காரணம் தெரியாமல் மக்கள் புலம்புகின்றனர்.

திங்கள் கிழமைகளில் மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் வாங்கப்படும் மனுக்கள் மீதாவது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று தெரியாமல் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இருக்கும் பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் பயன்படுத்தப்படும் கழிவு நீரை நகராட்சி பல லட்சம் செலவு செய்து கழிவுநீர் கால்வாய் கட்டியுள்ளது. இந்த கால்வாய் வழியாக கழிவு நீர் ஏரியில் சென்று கலக்கிறது. இதனால் ஏரி நீர் கெட்டு துர்நாற்றம் வீசுகின்றது. 

இதனால் ஏற்கனவே ஏரியில் இருந்த நீரையும் இந்தப்பகுதி வாழ் மக்கள் பயன்படுத்த முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி அரசு செய்யும் தவறால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறனர். இந்த கழிவு நீர் செல்ல மாற்று வழி அமைக்கப்படுமா? ஏரியை அசுத்தமின்றி காக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா? என்பதே இந்தப்பகுதி வாழ் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் என்னதான் நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label