OUR CLIENTS
அன்புமணி, திருமாவளவன், சீமான் ரஜினியின் அரசியல் எதிரிகளா?
அன்புமணி, திருமாவளவன், சீமான் ரஜினியின் அரசியல் எதிரிகளா? Posted on 22-May-2017 அன்புமணி, திருமாவளவன், சீமான் ரஜினியின் அரசியல் எதிரிகளா?

சென்னை, மே 22-
ரஜினி, சில தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பேசியிருப்பதன் மூலம், தன் அரசியல் எதிரிகளை, ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தி காட்டியுள்ளார்.

சென்னையில், தன் ரசிகர்களை, நீண்ட நாட்களுக்குப் பின், ரஜினி சந்தித்தார். அவரது உரையில், ஸ்டாலின், திருமாவளவன், சீமான், அன்புமணி ஆகிய, நான்கு பேரை புகழ்ந்து பேசினார். இது, அரசியல் வட்டாரங்களில் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினியை, வீடு தேடி போய் சந்தித்த, பிரதமர் மோடியை பாராட்டாமல் விடுவதா என, பா.ஜ., கேள்வி எழுப்பியது. ரஜினியின் புதிய படம் வரவிருப்பதால், ரசிகர்களை உசுப்பேற்றுவதற்காக, ரஜினி அப்படி பேசியதாக, அவரை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

எனினும், ‘போர் களத்துக்கு தயாராகுங்க; பணம் சம்பாதிக்கிறவங்க ஒதுங்கிடுங்க’ என, அவர் பேசிய வரிகள், அரசியலில் குதிப்பதற்கு தயாராகி வருவதையே காட்டுகின்றன. அரசியலில் இறங்குவது பற்றி, ரசிகர்கள் மனதை ஆழம் பார்க்கவே, அவர்களுடன் ஐந்து நாட்களை, ரஜினி செலவிட்டதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, ரஜினியின் ஆன்மிக சிந்தனைகள், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளுடன், கொள்கை ரீதியாக, அவரை நெருக்கமாக வைத்துள்ளன. தி.மு.க.,விற்கு, 1996ல், தான் ஆதரவு தெரிவித்தது, தவறான முடிவு என, கூறியதன் மூலம், அக்கட்சி, தனக்கு ஒத்து வராது  என, கோடிட்டு காட்டியுள்ளார்.

மேலும், தன் படங்கள் வெளியாவதை தடுத்த, புகைபிடிக்கும் காட்சி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த, பா.ம.க.,வின் அன்புமணி; தன் இலங்கை பயணத்தை தடுத்து நிறுத்திய திருமாவளவன்; ‘ரஜினி, தமிழரே அல்ல’ என, கூறும் சீமான் ஆகியோரை, தன் பேச்சில் ரஜினி குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

இதன்மூலம், தன் அரசியல் எதிரிகளை, ரஜினி, தன் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளதாகவே, அவரது மன்றத்தினர் கருதுகின்றனர். கருணாநிதி செயல்படாத நிலையில், ஜெயலலிதா மறைந்துவிட்ட சூழலில், மேற்கண்ட நான்கு பேர், அவரது அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால் தான், புகழ்வதை போல், அவர்களை ரஜினி இகழ்ந்துள்ளார் என, அரசியல் விமர்சகர்களும் கூறுகின்றனர்.

Label