OUR CLIENTS
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் பா.ஜனதாவை வளர்க்க முயற்சி!
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் பா.ஜனதாவை வளர்க்க முயற்சி! Posted on 22-May-2017 தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் பா.ஜனதாவை வளர்க்க முயற்சி!

சண்டிகார், மே 22-
தமிழ்நாடு,மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதாவை வளர்க்க முயற்சி செய்வதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

2019 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியை தீவிரமாக வளர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   இதற்காக கட்சி தலைவர் அமித்ஷா 95 நாட்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி பணிகளை முடுக்கி விடுகிறார்.

இதன் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம்  சண்டிகாரில் நடந்த கட்சி கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-   மத்தியில் பாரதிய ஜனதா பதவி ஏற்று 3 வருடங்கள் ஆகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளால் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட கூற முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எத்தனை ஊழல் நடந்தது என்பது மக்களுக்கு தெரியும்.

நாங்கள் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்கிறோம். இதில், பெரிய அளவில் சாதனை நிகழ்த்தி இருக்கிறோம்.   நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பது எங்களது திட்டம்.  அடுத்ததாக தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதற்கு நாங்கள் தீவிரமாக கவனம் செலுத்த உள்ளோம்.

பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்திருந்த நாம் ஏன் தோல்வியை சந்தித்தோம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எங்களது கூட்டணி தொடரும்.   ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தேவை இல்லாமல் ஓட்டு எந்திரங்கள் பற்றி சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. இதே ஓட்டு எந்திரத்தை வைத்துதான் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை பிடித்தது.

காஷ்மீரில் தற்போது நடந்து வரும் அசாதாரண சூழ்நிலை போன்று பல தடவை நடந்துள்ளது. 1989-க்கு பிறகு இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், இதை நாங்கள் கட்டுக்குள் கொண்டு வருவோம். பாதுகாப்பு அமைப்புகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் கலவரங்களை உருவாக்கி வருகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label