OUR CLIENTS
இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...!
இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...! Posted on 23-May-2017 இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...!

வேலூர், மே 23-
இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் இந்த ஓராண்டில் கட்சிக்குள் எத்தனை எத்தனையோ அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன.

அதிமுக ரோலர் கோஸ்டர் ராட்டினம் போல் சுற்றிவந்துவிட்டது என்றால் அது மிகையாகாது. மே 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது. டிசம்பர் மாதம் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைந்தார். அவருக்குப் பின் முதல்வர் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் கட்சித் தலைமைக்கு எதிராகத் திரும்பினார். அதிமுக இரு அணிகள் ஆனது. அதைத் தொடர்ந்து வெகுசில நாட்களிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சிறை சென்றார். அவரைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்ற விவகாரம் வெடித்தது. சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தனை மாற்றங்களைச் சந்தித்த அதிமுக ஆட்சி நாளை ஓராண்டை நிறைவு செய்கிறது. இந்நிலையில் இதே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசும் 100 நாட்களைத் தொடுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற 4 மாதங்களில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கின. ஜெயலலிதாவின் கீழ் இருந்த இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெ. மருத்துவமனையில் இருந்த வேளையில், உணவு பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் போன்ற திட்டங்களுக்கு தமிழக அரசின் சம்மதத்தை மத்திய அரசு எப்படியோ பெற்றுக்கொண்டது. இந்த இரண்டு திட்டங்களுக்குமே ஜெயலலிதா மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவந்தது அனைவரும் அறிந்த விஷயம்.

டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்துவிட்டார். மீண்டும் முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம். முதல்வாரானதும் அவர் எதிர்கொண்ட முதல் சவால் வார்தா புயல். சென்னையைப் புரட்டிப்போட்டிருந்தது வார்தா புயல். சுறுசுறுப்பாக மீட்பு, நிவாரணப் பணிகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் மக்கள் அபிமானத்தை வென்றார். ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. அதை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தாமல் அமைதி காத்தார் பன்னீர்செல்வம். போராட்டம் வலுப்பெற்ற நிலையில் மத்திய அரசுடன் பேசு சுமுகத்தீர்வையும் கண்டு மீண்டும் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை உயர்த்தினார்.

எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதும் தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமைச் செயலகத்துக்குள் - தலைமைச் செயலர் அறைக்குள் - நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதும் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒரு பின்னடைவு என்றே கூறவேண்டும்.

வருமான வரித்துறை சோதனைகளால் விமர்சனங்களுக்குள்ளான ஓபிஎஸ் தன்னை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ள முயற்சித்தபோதுதான் சசிகலா முதல்வராக திட்டமிடத்தொடங்கினார். சசிகலா தரப்பு நெருக்கடியால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், அமைதியாக இருக்கவில்லை. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதிமுக இரு அணிகள் ஆனது. அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் என ஆதரவு இருந்தாலும் ஆட்சியை அமைக்கும் அளவுக்கு அவரால் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையைக் காட்ட முடியவில்லை. சசிகலா தான் சிறை செல்லும் முன்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார். சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களிடம் சென்று சேர்வதற்குள்ளதாகவே சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது எடப்பாடி அரசு மீதான மக்கள் விமர்சனத்தைத் தூண்டியது.

உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக அதிகாரி ஒருவர் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது முன்வைத்த புகார் என அடுத்தடுத்த நிகழ்வுகள் எடப்பாடி அரசுக்கு தர்மசங்கடத்தையே தந்தன. இப்படியான சூழலில்தான் அதிமுக அரசு நாளை ஓராண்டை நிறைவு செய்கிறது. இத்தனை திருப்பங்களுக்கும் இடையேயும் தமிழக அரசு சீரான பாதையில் முன்னேறுவதாகக் கூறுகிறார் மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி. “எங்கள் தலைவர் ஜெயலலிதா வகுத்தத் தந்த பாதையில் அரசு சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அவர் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். மற்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விரைவில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்“ என்றார். ஆனால் எதிர்க்கட்சி துணைத் தலைவரும் திமுக மூத்த தலைவருமான துரை முருகன், “ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கவேயில்லை. சாதனைகளைவிட சோதனைகள்தான் அதிகமாக இருக்கின்றன. அரசாங்கமே இல்லை என்றபோது அரசு திட்டங்கள் நிறைவேறுவது எப்படி சாத்தியமாகும்? மக்களை வாட்டியெடுக்கும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை. அமைச்சர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. சட்டப்பேரவையை ஜனநாயக முறையில் நடத்த சபாநாயகர் முன்வருவதில்லை. மொத்தத்தில் அரசின்மை சூழலே தமிழகத்தில் நிலவுகிறது.” என்றார்.

இத்தகைய அதிரடி திருப்பங்களையும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் சந்தித்து ஓராண்டை நிறைவு செய்யவுள்ளது அதிமுக. ஆனால் ஆட்சி மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் அதிமுக ஆட்சி தொடருமா? கவிழுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்காகத்தான் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி முன்வராமல் அமைதி காத்து வருகிறார். இதை வலியுறுத்தி திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ கண்டும் காணாமல் இருந்து வருகிறார். அதிமுக ஆட்சி தப்புமா?.

Label