OUR CLIENTS
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்!
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்! Posted on 25-May-2017 அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்!

சென்னை, மே 25-
சென்னை புதிய ஆவடி ரோட்டில் காந்தி நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா அமோகமாக அதிகாலை 5 மணி முதல் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. 

சென்னை தமிழகத்தின் தலைநகராக திகழ்கிறது. ஆனால் இங்கு அரங்கேறாத குற்றங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சமுதாய சீரழிவும் ஒருபுறம் சத்தம் காட்டாமல் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் சட்டம்&ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறையோ காலில் போட்டு மிதித்து விட்டதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. கையூட்டு, அன்பளிப்பு, லஞ்சம் என்று ஒழிகிறதோ அன்றுதான் இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு ஏற்படும். இதற்கெல்லாம் விடை காண  வேண்டும் என்றால் காவல் துறையில் உள்ளவர்கள் சரியாக நடந்து கொண்டால் அனைத்தும் முறையாக இயங்க ஆரம்பித்து விடும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சட்டம் கடமையைச் செய்தால் அனைத்தும் சரியாகி விடும்.

ஆனால் நிலைமையோ தலைகீழாக உள்ளது. காவல்துறையில் ஒரு சில கருப்பு ஆடுகள் பணத்துக்கு ஆசைப்பட்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வேலியே பயிரை மேய்வது போன்று இவர்களது செயல்பாடு மாறிவிடுகிறது. கண்ணியம் தவறாமல் செயல்படும் காவல்துறை அதிகாரிகளும் உள்ளனர். அவர்களை அரசியல் , அதிகாரம் செல்வாக்கு மிக்கவர்கள் செயல்படவிடாமல் செயலிழக்க வைக்கின்றனர். தமிழக அரசு மக்களின் நலனில் அக்கறை கொண்டு போதை பாக்கு உட்பட பலவகை போதை பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. 

ஆனால் இந்த பொருட்கள்தான் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதும் இந்த குட்காதான். இதை அரசு அலுவலர்கள் முதல் காவல் துறையில் உள்ளவர்கள் வரையில் அனைவருக்கும் நன்கு தெரியும். பலவகை போதை பொருட்களை தடை செய்யும் அரசு அதிகாரிகள் இந்த போதை பாக்கு விற்பனையை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருப்பது போல நாடகம் ஆடுகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது. 

சாந்தி புகையிலை, பான்பராக், ரஜினி என்று அனைத்தும் அமோகமாக விற்பனை நடக்கிறது. இவையனைத்தும் ரூ.10க்கு மேல் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து யாரேனும் பொதுமக்கள் மனது கேளாமல் புகார் தெரிவித்தால் போதும் போலீசாரின் மாமூலுக்கு வேட்டு வைத்து விட்டார்களே என்று அவர்களிடம் கடுகடுப்பாக நடந்து கொள்கின்றனர். 

இதனால் புகார் தெரிவிக்கும் பொதுமக்களும் நமக்கேன் வம்பு என்று அமைதி காத்து வருகின்றனர். கடைக்காரர்கள் கேட்கும் விலையை கொடுத்து விட்டு பதில் ஏதும்  பேசாமல் அமைதியாக சென்று விடுகிறார்கள் இதுபோன்ற போதை ஆசாமிகள். இந்த பாக்கின் தீமை குறித்து அந்த பாக்கின் அட்டையில் படத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது. 

காவல் துறையில் உள்ள களைகள் ஒழிந்தாலே போதும் நாடு 100 சதவீதம் ஊழல் ஒழிந்து விடும். சட்டத்தை கண்டு அனைவரும் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். இதுபோன்ற சமூக விரோதிகள், ஊழல் பெருச்சாளிகள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியாத நிலை ஏற்படும். நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக பின்பற்றப்படும். குற்றங்களும் நாளடைவில் குறையத் தொடங்கிவிடும். பாக்கு, புகையிலை போன்ற போதை வஸ்துக்களின் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கூறுவார்கள். ஆனால் இந்த திருடர்கள் திருந்துவதாய் இல்லை. திருந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போதை பாக்கு விற்பனையாளர்களை கூண்டோடு கைது செய்து சட்டத்தின் பிடியை சற்று இறுக்கினால்தான் இதுபோன்ற வியாபாரம் அடியோடு ஒழியும். காவல் துறையில் உள்ள கண்ணியவான்கள் மனது வைத்தால் மட்டுமே அது நடக்கும். அதுவரை பொறுத்திருப்போம்.

Label