OUR CLIENTS
வணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்!
வணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்! Posted on 25-May-2017 வணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்!

வேலூர், மே 25-
வணிகவரித்துறையை ஏமாற்றி பலர் இன்று நாட்டில் அமோகமாக வியாபாரம் செய்கிறார்கள். கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதாகவும் குற்றச்சாட்டு வலுப்பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் மர வியாபாரம், டைல்ஸ் வியாபாரம், கதவுகள், பைப்புகள் மற்றும் ஜன்னல்களுக்கு பொருத்தும் பிட்டிங்குகள், கண்ணாடிகள், பீங்கான் பேசின்கள், வால் டைல்ஸ்கள், ஃப்ளோர் டைல்ஸ்கள் போன்றவைகள் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இந்த பொருட்களை வாங்கும் நுகர்வோர் பல ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கில் இதில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இவர்கள், நுகர்வோருக்கு எந்தவித ரசீதுகளும் வழங்குவது இல்லை. மாறாக வெள்ளை துண்டு சீட்டில் ரசீது வழங்கப்படுகிறது. குறிப்பாக ரொக்கமாக பணம் கொடுத்தால் மட்டுமே பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது.

இதற்கு காரணம் வணிகவரித்துறையினருக்கு கப்பம் கட்டுவதாக கூலாக பதில் கூறுகின்றனர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மலைமுழுங்கி மகாதேவன்கள். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெறுகிறது. இதை அரசும் கண்டும் காணாமல் அமைதி காத்து வருகிறது. பணபரிவர்த்தனையை அடியோடு தடுத்து நிறுத்தும் முயற்சியில் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜுலை மாதம் முதல் ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்பட உள்ளது. இப்படி பல்வேறு சட்டதிட்டங்கள் வந்தாலும் இதுபோன்ற தொழில் செய்யும் திருடர்கள் தமிழகம் முழுவதும் வியாபித்துள்ளனர். இவர்கள் நாங்கள் ராஜஸ்தானில் இருந்து குடிபெயர்ந்து தமிழகம் வந்துள்ளோம் பிழைக்க என்று கூறுகின்றனர். 

இவர்கள்தான் நாட்டை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து பணத்தை வாரி சுருட்டி நன்கு உண்டு கொழுக்கின்றனர். இதை வணிகவரித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்க கூடாது. இவர்களது கடைகள் மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் காட்டாமல் உள்ள கருப்பு பணத்தை கோடி கோடியாக பறிமுதல் செய்ய வேண்டும். வரி கட்டாமல் ஏய்ப்பவர் பெரும்பான்மையானவர்கள் இதுபோன்ற வணிகம்தான் செய்கின்றனர். டெபிட் கார்டு ஸ்வைப்பை கூட இவர்கள் ஏற்பதில்லை. பொதுமக்கள் வரியுடனான பில் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் பொது வேறு கடையை நாடி சென்றால் அவர்களும் இதையேதான் சொல்லுகிறார்கள்.

அனைவரும் ஒன்றுகூடி ஒற்றுமையாக விற்பனை வரி கட்டாமல் ஸ்வாகா விடுகின்றனர். இந்த துண்டு சீட்டில் ரசீது கொடுப்பதால் முழு பணமும் வியாபாரிகள் கைக்கு மொத்தமாக போய் சேர்ந்து விடுகிறது. பல முறை இந்த ரசீது செல்லாது என்றும், இந்த ரசீது எங்கள் கடைக்கு சொந்தமானது இல்லை என்றும் வியாபாரிகள் தப்பித்து கொள்வது நடைமுறையில் நடந்து வருகிறது. ஆனால் நடவடிக்கை என்பதோ இல்லை என்றே சொல்லலாம். 

கட்டடம் தொழில் சம்மந்தமான அனைத்து பொருட்களும் விற்பவர் துண்டு சீட்டு முறையில்தான் பில் கொடுக்கிறார்கள். வருமான வரி கட்டாமல் கணக்கில் வராத பணங்களும், இவ்வழியில் தான் மறைக்கப்படுகின்றன. வருமானவரி ஏய்ப்பவர்களும், விற்பனைவரி ஏய்ப்பவர்களுக்கும் ஏற்ற வழி கட்டடம் கட்டுவதுதான் என்பது நிரூபணமாகி வருகிறது. 

பாத்ரூம் கைப்பிடி முதற்கொண்டு, சிமென்ட், கம்பி, மரம், டோர் என அனைத்தும் பில் இல்லாமல்தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழிலில் அதிகமானவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வரி ஏய்ப்பு செய்து வெளிமாநிலத்தில் பதுக்கப்படுகிறது.

இதை வருமானவரி மற்றும் விற்பனை வரி அதிகாரிகள் முறையாக சோதனை செய்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கையால் வரி ஏய்ப்பு செய்பவர்கள் அஞ்சும்படி இருக்க வேண்டும்.  வணிகவரித்துறையினர் துணைக்கு சிபிஐ உதவியை நாடினாலும் தப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைய இதுபோன்ற சமூக விரோதிகள் சத்தமின்றி செயல்படுவதை கண்டறிந்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைகளில் உள்ள இருப்பு, விற்பனை போன்றவற்றை ரகசியமாக கணக்கெடுத்து வைத்து கொள்கின்றனர். இன்னமும் சிலர் அடிக்கடி திருடு போனதாக கூறி அரசை ஏமாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பட்டப்பகலில் நடக்கும் மோசடி வியாபாரிகளை தண்டிக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசும், மாநில அரசும் முன்வர வேண்டும். தற்போதுதான் காளீஸ்வரி நிறுவனத்தில் வரிஏய்ப்பு சோதனை நடந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

ஆனால் தினமும் இதுபோன்ற வியாபாரிகள் நடத்திவரும் வரி ஏய்ப்பை முடிவுக்கு கொண்டு வர வணிகவரித்துறையினர் முன்வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பெருச்சாளிகள் சட்டத்தின் முன் சிக்குவார்கள். நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்துவார்கள். வணிகவரித்துறை நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். ஏனென்றால் வரி நமது பணம், நமது நாட்டின் வளர்ச்சி என்பதை உணரவேண்டும்.

Label