OUR CLIENTS
பாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்!
பாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்! Posted on 27-May-2017 பாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்!

வேலூர், மே 27-
வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் இலவச, மிக்சி கிரைண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்காமல் பாழடைந்து வருகிறது. இப்படி  மக்களின் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச, மிக்சி  கிரைண்டர்கள் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான மக்களுக்கு இலவச பொருட்கள் கிடைக்கவில்லை. இதில் மிக்சி, கிரைண்டர்கள் கிடைத்தாலும் ஓட்டை  உடைசலாகவே இருந்தது. இதில் அதிமுக பிரமுகர்களின் உறவினர்களாக இருந்தால் 2, 3 என பெற்றுக்கொண்டதாகவும் புகார்கள் உள்ளது. இதில் தற்போது  இலவச பொருட்கள் அனைத்தும் காயலான் கடைகளில் தான் கிடக்கிறது. 

இதற்கிடையில் வேலூர் சேண்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தில் பல லட்சம் மதிப்புள்ள இலவச மிக்சி கிரைண்டர்கள் பாழடைந்து வருகிறது.  இப்படி மக்களின் வரிப்பணத்தை அதிமுக அரசு வீணடித்துவிட்டதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் தற்போது இலவச பொருட்கள்  வைக்கப்பட்டுள்ள சேண்பாக்கம் சமுதாய கூட கட்டடம் 10 ஆண்டுகளாகிறது. ஆனால் தற்போது வரை அந்த சமுதாயக்கூடம் இலவசங்கள் வைக்கும்  குடோனாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சேண்பாக்கத்தில் திருமண நிகழ்ச்சிகள், காதணி விழாக்கள், பிறந்த நாள் விழாக்கள் போன்றவற்றை ஏழை, எளிய மக்கள் தனியார் திருமண  மண்டபங்களில் அதிகளவிலான பணத்துக்கு வாடகை எடுத்து நடத்தும் நிலையாக உள்ளதென்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

எனவே கட்டிமுடித்து பல ஆண்டுகளாக குடோனாக செயல்பட்டு வரும் சமூதாயக்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, இலவசங்களை  பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

காட்பாடியில் கொள்ளைபோன இலவச பொருட்கள்!
இதேபோன்று காட்பாடி பகுதியில் பள்ளிகளில் இருப்பு வைத்திருந்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் ஆகியவற்றை அங்குள்ள அரசியல்வாதிகள், முன்னாள் கவுன்சிலர்கள், உள்ளூர் பிரமுகர்கள் ஆட்களை வைத்து அந்தந்த கட்டடங்களின் பூட்டுக்களை திறந்து வாரி எடுத்து சென்று விட்டனர். இது நேற்று முன்தினம் நடந்தது. இப்படி களவாடிய பொருட்களை ஆட்டோக்கள் கொண்டும், இருசக்கர வாகனங்களிலும் அள்ளிச் சென்றனர். சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கையில் கிடைத்த பொருட்களை வாரி சுருட்டினர். 

ஆனால் வருவாய்த்துறையோ ஏதும் நடக்காதது போல அமைதி காத்து வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், நாங்கள் வந்த பட்டியல்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கி விட்டோம். மீதம் எதுவும் இல்லை என்று கூலாக பதில் கூறுகின்றனர். அத்துடன் நாங்கள் ஜமாபந்தியில் படுபிசியாக உள்ளோம். அதையெல்லாம் நாங்கள் பார்க்க முடியாது என்று பதில் கூறுகின்றனர். இதே நிலைதான் வேலூரிலும் நிலவுகிறது. அரசு பணம் எப்படி யார் யாருக்கோ இரைக்கப்படுகிறது என்று இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. 

இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உரிய விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். மீதமிருந்த இலவச பொருட்கள் எங்கே?. அதை யார் யார் கொண்டு சென்றனர். அதை கொடுக்கச் சொன்னது யார்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிந்து விடும். மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதாவது பகல் கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பகல் கொள்ளைக்கு பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Label