OUR CLIENTS
ஒரு கிடாயின் கருணை மனு திரை விமர்சனம்
ஒரு கிடாயின் கருணை மனு திரை விமர்சனம் Posted on 05-Jun-2017 ஒரு கிடாயின் கருணை மனு திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஒரு படம் ரிலிஸாவதற்கு முன்பே பல விருது விழாக்களுக்கு செல்கின்றது. அப்படி படம் ரிலிஸ் ஆவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துக்கொண்ட படம் தான் ஒரு கிடாயின் கருணை மனு, விதார்த், ரவீனா மற்றுமின்றி பல நட்சத்திர பட்டாளங்களுடன் வெளிவந்துள்ள இந்த கிடாயின் கருணை மனுவை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? பார்ப்போம்.

கதைச்சுருக்கம்
விதார்த், ரவீனா புதுமண தம்பதிகள், இவர்கள் திருமணம் ஆன கையோடு ஓர் ஊரே குலதெய்வம் கோவிலுக்கு ஒரு ஆட்டை பலி கொடுக்க செல்கின்றது.
மக்கள் அனைவரும் சந்தோஷமாக கிளம்ப லாரியில் தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர். குலதெய்வம் கோவிலை நெருங்கும் இடத்தில் ஒரு விபத்து, லாரியில் ஒருவன் விழுந்து இறந்துகிடக்கின்றார்.

எல்லோரும் லாரி ட்ரைவரை திட்ட, பிறகு தான் தெரிந்தது, சில மணி நேரம் வண்டியை ஓட்டியது விதார்த் என்று. விதார்த்திற்கு திருமணம் ஆகி சில நாட்களே ஆகியுள்ளது. இதனால், இந்த விபத்தை மறைக்க வேண்டும் என்று எல்லோரும் போராட, அந்த விபத்தில் இறந்தவர் குறித்து ஒரு சிலர் தேடி வர, பிறகு என்ன ஆனது என்பதை கலகலப்பாகவும் எமோஷ்னலாகவும் கூறியுள்ளார் அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா.

படத்தை பற்றிய அலசல்
விதார்த் மைனாவிற்கு பிறகு ஒரு வெற்றியை கொடுக்க போராடி வருகின்றார். அவரும் காடு, குற்றமே தண்டனை என தரமான படங்களில் நடித்தாலும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், இந்த முறை சரியான ஒரு பாதையை தேர்ந்தெடுத்துள்ளார், தனக்கு 35 வயதில் திருமணம் ஆகி, மனைவியை அவர் பார்த்துக்கொள்ளும் விதம், பெரிய விபத்தே நடந்து மக்கள் பரபரப்பாக இருந்தாலும், இவர் தனக்கு யார் 35 வயது என்று சொன்னது என மனைவியிடம் கேட்கும் காட்சி என அசத்துகின்றார். ரவீனா முதல் படம் போலவே தெரியவில்லை, இதுநாள் வரை பல ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்தவர். தன் கணவருக்கு ஏதும் ஆகக்கூடாது என அவர் படம் முழுவதும் ஒரு பயத்துடன் இருக்கும் காட்சி ரசிக்க வைக்கின்றது. என்ன கிராமத்து பெண் போல் ஆள் மாறினாலும், குரல் மாடர்னாகவே உள்ளது.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஹீரோ தான், யாரையுமே இவர் தேவையில்லை என்று ஒதுக்க முடியாது. சமையல்காரர், ஆடு வெட்டுபவர், ரவீனாவின் அப்பா, அண்ணன், விதார்த்தின் நண்பர் ஆர்.பாலா அவருடைய தாத்தா பாட்டி, லாரி ஓனர், ட்ரைவர் வரை கலக்கியுள்ளனர். யாருமே நடித்தார்கள் என்று சொல்ல முடியாது, பலரும் பார்க்காத வெகுளியான மற்றும் விவகாரமான கிராமத்து மக்களை கண்முன் கொண்டு வந்துள்ளனர்.

அதிலும் பிணத்தை கையில் தொட்டால் ரேகை தெரிந்து விடும் என்று பாலிதீன் பை அணிந்து தூக்குவது, பிணத்தை பாதுகாக்க சிஃப்ட்(ஆள் மாத்தி ஆள்) வைத்துக்கொள்வது என அதகளம் செய்துள்ளனர். அதேநேரத்தில் விதார்த்திற்காக அனைவருமே ஒற்றுமையாக இருப்பது, அவர் அடிவாங்கும் போது அனைவருமே அவருக்காக அடிவாங்குவது என கிராமத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக அருகில் பார்த்த அனுபவம். சரணின் ஒளிப்பதிவு நம்மை ஸ்கிரீனுக்கு அழைத்து செல்கின்றது. ரகுராமின் இசையும் படத்திற்கு பலமாகவே உள்ளது, ப்ரவீன் ரிலி எடிட்டிங் என்றாலே படம் பெரிதாக தான் இருக்கும் என்பார்கள், ஆனால், இந்த படம் வெறும் 2 மணி நேரம் தான், நம்மை எங்கும் திரும்பவிடாமல் கட்டி வைக்கின்றது.

கைதட்டல்...
நடிகர், நடிகைகள் அனைவரின் நடிப்பும். வக்கீலாக வருபவர், நிஜ வக்கீல்கள் என்ன தான் சொந்தக்காரர்களாக இருந்தாலும் தங்கள் சுயலாபத்திற்காக இப்படியெல்லாம் செய்வார்களா? என நம்மையே எண்ண வைக்கின்றது. கிடாயின் கருணை மனு என டைட்டில் வைத்து ஒரு கிடாயின் பார்வையில் கதையை ஆரம்பித்து கடைசியில் கிடாய் யார்? கருணை எது? என காட்டிய விதம் சூப்பர். மொத்தத்தில் இந்த கிடாயின் கருணை மனுவை மக்கள் கண்டிப்பாக நம்பி ஏற்கலாம்.

Label