OUR CLIENTS
மேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்! இதிலும் அரசியல் விளையாடுது
மேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்! இதிலும் அரசியல் விளையாடுது Posted on 08-Jun-2017 மேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால்  விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்! இதிலும் அரசியல் விளையாடுது

விழுப்புரம், ஜூன் 8
 விழுப்புரத்தில் ரயில்வே மேம்பால பணியால் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விழுப்புரம் நகருக்கு வரவும், வெளியே செல்லவும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி துவங்கும் முன்பே இந்த அவல நிலை என்றால் பள்ளி, கல்லூரி துவங்கிய பிறகும் நகரமே ஸ்தம்பித்துவிட வாய்ப்புள்ளது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டிலுள்ள ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததையொட்டி அதனை சீரமைப்பதற்காக கடந்த 24ம் தேதி முதல் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரூ.2 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் 5 மாதம் நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி, கடலூர் மார்க்கம் செல்ல மாதாகோயிலில் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இருப்பினும் மக்களின் தேவைக்காகவும், முக்கிய பேருந்து நிலையம் போன்ற பல்வேறு வசதிக்காக நகர பகுதிக்கு வந்துசெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே போல் வேலைக்கு செல்வோரும் நகர பகுதிக்குதான் வர வேண்டும். ஆனால் அங்கிருந்து நகர பகுதிக்கு செல்ல போதிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யாததால் நகருக்கு வருவதற்கும், வெளியே செல்வதற்கு ஒரே வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். மகாராஜபுரத்திலிருந்து கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் வழியாகத்தான் நகர பகுதிக்கு கார், பைக்கில் வருபவர்கள் வந்து மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. நகர பகுதிக்கு வந்து செல்ல மாற்று வழி ஏதும் ஏற்பாடு செய்யாததால் தினமும் கீழ்பெரும்பாக்கம் தரை பாலத்தில் தினமும் கடும் நெரிசல் ஏற்படுகிறது. 

இந்நிலையில் நேற்றும் வழக்கத்திற்கு மாறாக காலை 8 மணி முதல் கீழ்பெரும்பாக்கம் தரைப் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிகள் நேற்று திறந்ததால் போக்குவரத்து வழக்கத்தைவிட சற்று அதிகமானது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் நீண்டதூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஆமை வேகத்தில் வாகனங்கள் சென்றன. இதனால் வேலைக்கு செல்பவர்கள், அவசர மற்றும் சுப நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். நகர பகுதிக்கு வந்து செல்ல இந்த ஒரு வழியை வைத்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால் மக்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. பள்ளி திறந்த முதல்நாளே இந்த அவலம் என்றால் அப்பகுதியில் ஏராளமான தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளது. கல்லூரிகளும் உள்ளது. 

இது குறித்து பொன்முடி எம்எல்ஏவும் கடந்த வாரம் ஆட்சியரை சந்தித்து முறையிட்டார். போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க ஒரே வழி, ஒருவழிப்பாதை மட்டுமே. வனஸ்பதி ஆயில்மில், வி.மருதூர் வழியாக ஒரு மார்க்கத்திற்கு வாகனங்கள் செல்லவும், மறு மார்க்கமான கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் நகரிலிருந்து வெளியே வரவும் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால் சொன்னதோடு சரி, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. மாவட்ட நிர்வாகம் அலட்சியமாகவே இருந்து வருகின்றது. 

அமைச்சர் சி.வி.சண்முகம் தொகுதியான விழுப்புரத்தின் மீது அவர் அக்கரை கொண்டு செயல்படுவதாக தெரியவில்லை என்று நகர மக்கள் ஒருபுறம் புலம்புகின்றனர். இல்லையெனில் இன்னொரு மேம்பாலம் ரயில்வே மேம்பாலத்துக்கு பக்கத்தில் கட்டவாவது திட்டம் போட்டு செயல்படுத்த வேண்டும். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பதால் எவ்வித நன்மையும் ஏற்படாது. ஆதலால் மாவட்ட நிர்வாகம் ஒருவழிப்பாதையாக இருவழிகளையும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இதில் முன்னாள் திமுக அமைச்சரும், இந்நாள் திருக்கோயிலூர் தொகுதி எம்எல்ஏவும், மத்திய மாவட்ட திமுக செயலாளருமான பொன்முடி கோரிக்கை மனு கொடுத்ததோடு சரி. மக்கள் படும் பாட்டை கண்டித்து ஒரு போராட்டத்தை திமுக நடத்த தயாராக இல்லை. 

எத்தனை முதியவர்கள், பெண்கள், கைக்குழந்தைகளோடு தினமும் விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பு தண்டவாளத்தை கடந்து நடந்து சென்று இருபுறமும் பயணிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு திட்டம் தீட்ட வேண்டும். இப்படி போக்குவரத்து பிரச்னை ஏற்பட்டுள்ளதை தங்களுக்கு சாதகம் ஆக்கி கொண்டு ஆட்டோக்காரர்கள் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். ரயிலடியில் இருந்து மாதாகோயில் செல்ல தலா ஒரு நபருக்கு ரூ.10 வசூலிக்கின்றனர் மனசாட்சியே இல்லாமல், இதை மாவட்ட நிர்வாகமும், வட்டார போக்குவரத்து அலுவலரும் கண்டுபிடித்து அந்த ஆட்டோக்களின் உரிமத்தை தயவு தாட்சண்யம் இல்லாமல் ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். 

இதில் கூட அரசியல்தான் நடக்கிறதே தவிர உருப்படியான பணிகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அமைச்சர், எம்எல்ஏக்கள் போன்று சொகுசாக கார்களிலா மக்கள் பயணிக்கின்றனர். நடந்து செல்லும் மக்கள் படும் பாட்டை உணர்ந்து, அவர்களை நினைவில் வைத்து விரைவில் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும். நமக்கென்ன என்று பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது என்று நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Label