OUR CLIENTS
சிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்!
சிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்! Posted on 08-Jun-2017 சிதம்பரம் அருகே முதலைகள் உலா  பீதியில் கிராம மக்கள் ஓட்டம்!

கடலூர், ஜூன் 8-
 சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெளியேறும் முதலைகள், சுற்றியுள்ள கிராமங்களில், சர்வ சாதாரணமாக உலா வருவதால், மக்கள் பீதி அடைந்துஉள்ளனர். 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில், 200க்கும் மேற்பட்ட முதலைகள் வசிக்கின்றன. ஆற்றில் இருந்து வெளியேறும் முதலைகள், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில், சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. கிராமங்களில் உள்ள வாய்க்கால், வயல்வெளி, குளம், ஏரிகளில் நிரந்தரமாக தஞ்சமடைந்துள்ள முதலைகள், மனிதர்களை தாக்குகின்றன.

 இந்த பகுதிகளில் முதலைகளால் கடிபடுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; பலர் இறந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை நோக்கி முதலைகள் படையெடுப்பதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். அழையா விருந்தாளியாக வந்துள்ள முதலைகள், வீட்டு வாசலிலும், சுவர் ஓரங்களிலும் படுத்து கிடப்பது, அன்றாட காட்சியாகிவிட்டது. இதனால், இருட்டி விட்டால், வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில், பிடிக்கப்படும் முதலைகள், வக்காரமாரி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் விடப்படுகின்றன. மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும் போது, முதலைகள் வெளியேறி, ஊருக்குள் உலா வருவது வழக்கம். 

தற்போது, வரலாறு காணாத வறட்சி காரணமாக, வக்காரமாரி குளம் வறண்டுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்ட முதலை கள் வெளியேறி வருகின்றன. இவை, குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பதுடன், வீடுகளில் உள்ள கால்நடைகளை குறிவைத்து தாக்குகின்றன. இதனால், பொதுமக்கள் உயிர் பயத்தில் உள்ளனர். 

இப்பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும்; பிடிக்கப்படும் முதலைகளை, பண்ணையில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. ஆனால், இந்த கோரிக்கை இதுவரை செயல் வடிவம் பெறாமலேயே உள்ளது.

Label