OUR CLIENTS
ரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்!
ரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்! Posted on 12-Jun-2017 ரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு  விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்!

விழுப்புரம், ஜூன் 12-
 விழுப்புரம் ரயில்வே மேம்பால சீரமைப்பு பணியால் திரு.வி.க. வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி நேரங்களில் நெரிசலை குறைக்க ரயில் நிலையத்தில் புதியவழிகள் திறக்கப்பட்டுள்ளது. 

எனினும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டிலுள்ள ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததையொட்டி அதனை சீரமைக்கும் பணி ரூ.2 கோடி மதிப்பீட்டில் கடந்த 28ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் வழியாக கார், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மூலம் நகரப்பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறுகிய பாலத்தில் அனைத்து வாகனங்களும் செல்வதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு, அதனை கடந்து செல்வதற்கும் நீண்டநேரமாகிறது. 

தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட்டதால் வழக்கத்தை விட கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வாகனங்கள் திரு.வி.க. வீதி வழியாகவே சென்று தரைப்பாலத்தை கடந்து செல்கின்றன. இந்த சாலையில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், அரசு பள்ளி, வழிபாட்டு ஸ்தலங்கள் இருப்பதால் மக்கள் கூட்டம் எப்போதும் கணிசமாக காணப்படும். இதனிடையே தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், வாகனங்கள் இவ்வழியாக அணிவகுத்து செல்வதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
காலையில் பள்ளி துவங்கும் முன்பும், மாலையில் பள்ளி விடும்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாணவ, மாணவிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அப்பகுதியில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பள்ளி துவங்கும் காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் ரயில் நிலையத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வழிப்பாதை நேற்று  முன்தினம் முதல் திறக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் 
இந்த வழியாக தண்டவாளத்தை கடந்து செல்லலாம். இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை கீழே இறக்கி தள்ளிச்செல்ல வேண்டும். 

பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அங்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இது நிரந்தர தீர்வாகாவிட்டாலும் ஓரளவிற்கு நெரிசலை குறைக்க வழி வகுக்கும். எனவே நிரந்தர தீர்வு காண வி.மருதூர் வழியாக ஒருவழிப்பாதை திட்டத்தை  விரைவில் அமல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் 
உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Label