ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முழு கவனம்: சுரேஷ் பிரபு Posted on 12-Jun-2017
புதுதில்லி, ஜூன் 12-
ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முழு கவனம் செலுத்தி வருவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் பல்வேறு இடங்களில் ரயில் சேவைகளை அவர் தொடங்கி வைத்தார். இதன்பின்னர் பேசிய சுரேஷ் பிரபு, ரயில்வேத் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார். தரமான ரயில் சேவை வழங்கி, நிதி ஆதாரத்தை பெருக்க முதலீடுகளை ஈர்க்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்கட்டமைப்பு வசதிகளுக்காக அரசு, 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வேத்துறையில் முதலீடு செய்ய உள்ளதாகவும் சுரேஷ் பிரபு கூறினார். ரயில் பாதைகள் 42 சதவீதம் மின்மயமாக்கப் பட்டதாக கூறிய அவர், அடுத்த 5 ஆண்டுகளில் இதனை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.