OUR CLIENTS
தமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை!
தமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை! Posted on 13-Jun-2017 தமிழகத்தில் குடுமிபிடி சண்டையில்  ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை!

சென்னை, ஜூன் 13-
தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும் கடந்த காலங்களில் 20 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரசுக்கு தனி வரலாறு உண்டு. இதற்கு பின்னர் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தன. அந்த காலக்கட்டத்தில் பல கட்சிகள் புதிதாக தோன்றினாலும் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியவில்லை. அதேவேளையில் கூட்டணி கட்சிகள் தேர்தல் நேரத்தில் மாறிக்கொண்டிருந்தாலும் எந்த கட்சியும் நிலையான ஒரு கூட்டணியில் இருந்ததில்லை. மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலையைக்கூட கடந்த 1980களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் தலைமையில் செயல்பட்ட அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை தோல்வியடையச் செய்தது.

அதற்கு பின்னால் கடந்த 1989ல் இருந்து 2011 வரை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றினாலும் 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரசையும் சேர்த்து தோல்வியடையச் செய்து ஒரு வரலாறு படைத்தது அதிமுக. ஒரு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்த அதிமுகவின் தலைவி ஜெ.ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த நேரத்தில் தமிழகத்தின் அரசியலை சற்று திரும்பி பார்த்தால் ஒரே கட்சிக்குள் சில பிரிவுகள் இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஒருபக்கம் சசிகலா அணி என்றும், மற்றொரு பக்கம் ஓ.பி.எஸ். அணி என்றும் இருபிரிவுகளாக பிரிந்ததால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தியதால் அதிமுகவுக்கு சொந்தமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. அதேவேளையில் பன்னீர்செல்வம் அணியில் சிறு சலசலப்புகள் வந்து கொண்டிருக்கிறது. நத்தம் விசுவநாதன் தலைமையில் ஒரு சிறு பிரிவு வரலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இன்றைய முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு கொண்டு டிடிவி தினகரன் ஒரு வழியில் செல்கிறார்.அவருக்கு பின்னால் எம்பிக்களும், எம்எல்ஏக்களும் இருப்பதாக சொல்கிறார்கள். இதுஒருபுறம் இருந்தாலும் திமுகவில் கருணாநிதிக்கு வைர விழா கொண்டாடும் நேரத்தில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாளுக்கு சரியாக மரியாதை தரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமா திமுகவுடன் இப்போது வரை உறவாடிக் கொண்டிருக்கும் பல கட்சித்தலைவர்களுக்கு அழைப்பிதழ் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. திமுகவில் உள்ள முக்கிய எம்பிக்களும், எம்எல்ஏக்களும் தலைவரை பார்க்கவே விரும்பினார்கள். ஆனால் மருத்துவர்கள் அனுமதி தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுஒருபக்கம் இருந்தாலும் அடுத்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியே ராகுல்காந்தி வருகிறார் என்று என்னிடம் யாரும் சொல்லி விழாவுக்கு வர அழைக்கவில்லை. குறிப்பாக திமுகவும் அழைக்கவில்லை என்று அவரே சொல்லியுள்ளார்.

அதேநேரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் முக்கியஸ்தராக இருக்கும் துபாய் அப்துர் ரஹ்மானையும் அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.  கம்யூனிஸ்ட் கட்சிகளில் தமிழகத்தில் முக்கியமானவராக இருந்த த.பாண்டியனை யாரும் அழைக்கவில்லையாம். அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தொல்.திருமாவளவன் என்றைக்குமே மத்திய, மாநில ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பவர். இவருடன் இருக்கும் நிர்வாகிகள் இன்று செயல் இழந்து இருக்கிறார்கள். யாரிடம் போய் எந்த உதவியும்பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்து தேமுதிக 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 29 எம்எல்ஏக்களை பெற்று எதிர்கட்சி தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஒரு ராஜ்யசபா எம்பியை பெற வழிதெரியவில்லை. 24 எம்எல்ஏக்களை கொண்ட திமுக கனிமொழியை ராஜ்யசபா எம்பி ஆக்கியது. இதில் திறமைக்கு மட்டும்தான் பதவி கிடைக்கிறது. 

இன்று தேமுதிகவில் விரைவாக செயல்பட தலைவரால் முடியவில்லை என்று ஒரு செய்தி அரசியல்வாதிகள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் உலா வந்து கொண்டிருக்கிறது. ஜவாஹிருல்லா தலைமையில் உள்ள மனித நேய மக்கள் கட்சி இரண்டாக உடைந்து 2016ல் அதிமுக கூட்டணிக்கு சென்று பிரிந்து சென்ற அன்சாரி எம்எல்ஏ ஆனார். அதேநேரம் புதிய தமிழகத்தை சார்ந்த டாக்டர் கிருஷ்ணசாமி, 2016ல் திமுக கூட்டணியில் சேர்ந்தும் சட்டமன்றத்துக்கு செல்ல முடியவில்லை. இதேநிலைதான் மனிதநேய மக்கள் கட்சிக்கும் நடந்து விட்டது.
பாமக கடந்த 2014ல் பாஜவுடன் சேர்ந்து ஒரு எம்பி சீட்டை பெற்றது. 2016ல் சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற முடியவில்லை. மத்தியில் ஆளுகின்ற பாஜ தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் அதில் போட்டியிட்டு ஜாமின் தொகையை இழந்து கொண்டிருக்கிறது. இந்த கட்சியின் தமிழ்மாநில தலைவி தமிழிசை சௌந்தர்ராஜன் ஒருபுறமும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றொரு புறம் இல.கணேசன் எம்பி, வேறொருபுறம் எச்.ராஜா என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாகிவிட்டார்.

 இப்படித்தான் தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் அவர்களின் கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தை தீர்க்க முடியாமல் தடுமாறிகொண்டிருக்கிறார்கள். இன்று ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவை அச்சுறுத்தும் வகையில் டிடிவி தினகரனின் செயல் இருக்கிறது. அதேநேரம் என்னை யாராலும் நீக்க முடியாது என்று துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசிய பேச்சுக்கு பன்னீர்செல்வம், நாங்கள் பொதுச்செயலாளரையே நீக்க முடிவு செய்து தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறோம் என்று கூறுவதை பார்க்கும்போது அதிமுகவில் இனி ஒற்றுமை வரும் என்பதை யாராலும் எதிர்பார்க்க முடியாது. உடைந்தபானை போன்று அதிமுகவில் அணிகள் வட, தென் துருவங்களாக மாறியுள்ளன. இதுபோதாதென்று தீபா ஒருபுறம் சுற்றி வருகிறார்.

அனைத்து கட்சிகளிலும் முட்டலும் மோதலும் நிறைந்து இருக்கிறது. ஆகையால் உள்ளாட்சி தேர்தல் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பதாக இல்லை. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலே வந்துவிடும் என்று கணித்து சொல்வதா என்ற கேள்விக்கு பதிலே சொல்ல முடியாது. அரசியல் ஆய்வாளர்கள் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் உண்மையாகும். ஆரோக்கியமான சூழல் நிலவாததால் தமிழகத்தில் இழுபறி நிலைதான் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Label