OUR CLIENTS
அடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு!
அடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு! Posted on 13-Jun-2017 அடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம்  திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு!

கன்னியாகுமரி, ஜூன் 13-
கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யாமல் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் தொடர்ந்து  புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருவனந்தபுரம்  கன்னியாகுமரி ரயில் மார்க்கத்தில் வருமான அடிப்படையில் திருவனந்தபுரம் ரயில் நிலையம்  முதல் இடத்திலும், நாகர்கோவில் ரயில் நிலையம் 2ம் இடத்திலும், குழித்துறை ரயில் நிலையம் 3ம் இடத்திலும் உள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி  முதல் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் வரையிலும் 11 ரயில் நிலையங்கள் உள்ளன. ஒரு ரயில் நிலையத்தின் வளர்ச்சி அதன் வருமானத்தின்  அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது. அதன்படி குழித்துறை ரயில் நிலையத்தின் வருமானம் ஆண்டுக்கு ரூ.8 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்  மூலம் தெரிய வருகிறது. 

ஆனால் ரயில்வே நிர்வாகம் ரூ.5 கோடி வருவாய் என குறைத்து மதிப்பிட்டு பி கிரேடு ரயில் நிலையம் என காட்டியது தற்போது அம்பலமாகி உள்ளது.
திருவனந்தபுரம் கோட்டத்தில் கேரள மாநிலத்தில் உள்ள வர்க்கலை உள்ளிட்ட பல ரயில் நிலையங்கள் வருவாயில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தும்,  அந்த ரயில் நிலையங்களில் மேம்பாட்டு  பணிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். விளவங்கோடு, கிள்ளியூர், பத்மனாபபுரம்  தொகுதிகளை சேர்ந்த  மக்கள் அதிகமாக குழித்துறை ரயில் நிலையத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர். வட இந்தியாவில் பணியாற்றுகின்ற குமரி ராணுவம் மற்றும் எல்லை  பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட மேலும் பல தொழில் அதிபர்கள் அதிக அளவில் பயணிப்பது குழித்துறை ரயில் நிலையத்தில் இருந்துதான் என்பது  குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 5 ஆயிரம் பேர் பயணிப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு ரயில்வே  வாரியத்தின் விதிமுறைகளின் படி முன்பதிவு மற்றும் பயணசீட்டு கவுண்டர்கள் 6ம், குடிநீர் நல்லிகள் ஒவ்வொரு நடைமேடைக்கும் 12ம், பயணிகள் ஓய்வறை,  ஒவ்வொரு நடைமேடைக்கும் இருக்கைகள், ஒன்றாம் நடைமேடையில் 396 சதுர மீட்டர் மேற்கூரை, 2ம் நடைமேடையில் 186 சதுர மீட்டர் மேற்கூரை, மேலும் 4  கழிவறைகள்,30க்கும் அதிகமான விளக்குகள், தண்ணீர் வசதி, கம்ப்யூட்டர் மூலம் ரயில் வருவதை அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்க  வேண்டும். ஆனால் இவை முறையாக செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.     

அதே வேளையில் அண்டை மாநிலத்தில் உள்ள  குறைந்த வருவாய் ஈட்டுகின்ற பல  ரயில் நிலையங்களில் அதிக வசதிகளும், அதிகமான ரயில்களும்  நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. ஆனால் குமரி மாவட்ட ரயில் நிலையங்கள் கேரள அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக  புகார் கூறப்படுகின்றன. எனவே குமரி மாவட்டத்தில் அதிக வருமானத்தை ஈட்டி தருகின்ற குழித்துறை ரயில் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக ரயில் நிலையத்தின் மேற்கூரை நீட்டிக்க வேண்டும், மூன்று இருப்பு பாதைகள் கொண்ட ரயில் நிலையமாக  மாற்றி அமைக்க வேண்டும், பயணிகளுக்கு தேவையான ஓய்வறைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.ரயில் குடிநீர் பேக்கிங் தொழிற்சாலை பாறசாலை ரயில் நிலையத்தில் உள்ளது.

 ஆனால் அங்கு தண்ணீர் வசதி இல்லாமல் இருந்தும் அந்த திட்டத்தை  அதிகாரிகள் பாறசாலையில் செயல்படுத்தி வருகின்றனர். இதற்கான தண்ணீரை குழித்துறை ஆற்றில் இருந்து 
தினமும் லாரிகள் மூலம் பாறசாலைக்கு கொண்டு  செல்கின்றனர். இதனால் ரயில்வேக்கு அதிக இழப்பு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Label