OUR CLIENTS
விழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே!
விழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே! Posted on 14-Jun-2017 விழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி  பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே!

விழுப்புரம், ஜூன் 14-
சட்டம் பயில விரும்பும் விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வசதியாக விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மூன்று நகரங்களில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மே மாதம் 25ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 

அந்த அறிவிப்பில் இப்புதிய அரசு சட்டக்கல்லூரிகளில் 2017&18ம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் வாயிலாக சேர்க்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் விழுப்புரம் பகுதி அதிமுகவினர் மற்றும் இளைஞர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆனால் இந்த அறிவிப்பு பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசுக்கு பேரிடியாக அமைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 

ஏனென்றால் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்ப்தில் சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேராடி வருகிறார் மருத்துவர் ராமதாஸ். இதேபோன்று விழுப்புரத்தில் திமுக ஆட்சியில் எப்படியாவது அரசு சட்டக்கல்லூரியை கொண்டு வர வேண்டும் என்ற கனவில் திமுக முன்னாள் அமைச்சரும், இந்நாள் திருக்கோயிலூர் தொகுதி எம்எல்ஏவுமான பொன்முடி திட்டம் தீட்டியிருந்தார். அவரது கனவு கோட்டையும் அமைச்சர் சி.வி.சண்முகத்தால் தகர்ந்தது, தவிடுபொடியானது என்று கூட சொல்லலாம். 

இதுகுறித்து பாமக முன்னாள் எம்பி கோ.தன்ராஜ் கூறுகையில், வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு கடந்த 2007ம் ஆண்டு அனுமதி பெற விண்ணப்பித்தோம். கலை அறிவியல் கல்லூரிக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. சட்டக்கல்லூரிக்கு அனுமதி தரப்படவில்லை. 
ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு தரமான சட்டக் கல்வி வழங்க வேண்டும் என்பதை முன்வைத்து நீதிமன்றத்தின் வாயிலாக வழக்கு தொடர்ந்தோம். ஆனால் தற்போது விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது எங்களுக்கு செக் வைப்பது போலத்தான் உள்ளது என்று கருத்து தெரிவித்தார். நிலைமை இப்படி இருக்க முன்னாள் திமுக அமைச்சர் க.பொன்முடி விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்ததுடன் சட்டசபையிலும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு சட்டக்கல்லூரி விழுப்புரத்திற்கு வந்ததில் திமுகவினருக்கு மட்டடற்ற மகிழ்ச்சிதான் என்றாலும் திமுகவினர் கொண்டு வர முடியாமல் போனது சற்று மட்டுமல்ல பெருத்த ஏமாற்றத்தை பொன்முடிக்கு ஏற்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். சட்டத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அவ்வளவு எளிதில் மற்றவர்களுக்கு செய்ய மாட்டார் என்பதற்கு விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லூரி கொண்டு வரும் விஷயத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

இதுகுறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், கடந்த 2014ம் ஆண்டு போடப்பட்ட அரசாணைப்படி ஏழை, எளிய மக்களுக்கு தரமான சட்டக்கல்வி தர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மூன்று இடங்களில் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. வேறு காரணம் எதுவும் இல்லை என்றார் கூலாக. இதுஒருபுறம் இருக்க பொன்முடியை திமுக தலைவர் கருணாநிதிக்கு அறிமுகப்படுத்தியவரே ஈ.எஸ்.சாமிக்கண்ணு நாட்டார். கடந்த 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுமாறு ஈ.எஸ்.சாமிக்கண்ணுவை கருணாநிதி கூறினார். ஆனால் சாமிக்கண்ணுவோ எனக்கு சீட் வேண்டாம், பேராசிரியராகவும், தி.க.வில் முழு ஈடுபாட்டோடும் இருக்கும் பொன்முடிக்கு அந்த வாய்ப்பை தாருங்கள். நான் வெற்றி பெற வைக்கிறேன் என்று உறுதிமொழி கொடுத்து கருணாநிதியிடம் அறிமுகப்படுத்தினார் சாமிக்கண்ணு. ஆனால் இதை மறந்துவிட்டு பொன்முடி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சராக வலம் வந்தார். ஈ.எஸ்.சாமிக்கண்ணு தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, ஈ.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, ஈ.எஸ். மருத்துவமனை, ஜிஆர்பி தெரு எனப்படும் பெரியகாலனியில் கருவாட்டு மண்டி நடத்தி வரும் தொழிலதிபர் ஆவார். 

இந்நிலையில் பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அதே சாமிக்கண்ணு விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி பெற்றுத்தருமாறு கேட்டாராம். அதற்கு கையை விரித்து விட்டாராம் பொன்முடி. இப்படி சாமிக்கண்ணுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அரசு மருத்துவக் கல்லூரியை விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் கொண்டு வந்தார் என பொன்முடியின் விசுவாசத்தை விழுப்புரத்தில் உள்ள திமுக அதிருப்தியாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் விழுப்புரம் தொகுதியில் பொன்முடியின் செல்வாக்கு சரிந்தது, சி.வி.சண்முகத்தின் செல்வாக்கு விழுப்புரத்தில் ஏறுமுகம் கண்டது. இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. செஞ்சி எம்எல்ஏ ஏழுமலைக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் சூழல் நிலவியது. இதையறிந்த ராமதாஸ், திண்டிவனம் எம்எல்ஏ சி.வி.சண்முகத்துக்கு கொடுங்கள் என ஜெயலலிதாவிடம் பரிந்துரை செய்ததின் பேரிலேயே அந்த வாய்ப்பு சண்முகத்துக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாமக சிறிது காலத்திலேயே அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தது. 

தலைமைக்கு கட்டுப்பட்டு சி.வி.சண்முகமும், ராமதாசுக்கு எதிராக அரசியல் செய்யும் சூழல் ஏற்பட்டு சட்டக்கல்லூரி கனவைத் தகர்க்கும் நிலைக்கு வந்துள்ளது. எது எப்படியோ மாணவர்களுக்கு நல்லது நடந்தால் சரி. யார் செய்தால் என்ன, ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்பது போல நமது பணி சிறப்புடன் நடந்தால் சரி என்ற முனைப்புடன் விழுப்புரம் தொகுதி மக்கள் மற்றும் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களும் இருந்து வருகின்றனர். 


Label