OUR CLIENTS
வாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...
வாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு... Posted on 15-Jun-2017 வாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது  பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...

வேலூர், ஜூன் 15-
காவல்துறை உங்கள் நண்பன் என்பது வெறும் வாசகம் மட்டுமே. பொதுமக்கள் பிரச்னை என்று காவல்துறையை நாடினால் அராஜக போக்குதான் நிலவுகிறது. 

நாட்டில் பல குற்றச்செயல்கள் நடைபெற்றுவருகின்றன. அதையெல்லாம் விடுத்து, வாகன தணிக்கையை மட்டுமே பிரதான வேலையாக செய்து வருகின்றனர் காவல்துறையினர் என்றால் மிகையாகாது. அவர்களது நோக்கம், இன்று எத்தனை வண்டிகளை மடக்கி கல்லாகட்டுவது என்று டார்கெட் வைத்து நன்றாக வேலைபார்க்கின்றனர் நம் காக்கிச்சட்டையினர் என்று பொதுமக்கள் வன்மையாக குற்றம் சாட்டுகின்றனர். 

டி.கே.எம். கல்லூரி பின்புறம் உள்ள காலிமனைகளில் குடிபிரியர்கள் தினமும் குடித்துவிட்டு அவ்வழியே செல்லும் பெண்களிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். டி.கே.எம். கல்லூரியிலிருந்து, அதன் பின்புறம் உள்ள  கணபதி நகர் வரையிலும் இக்கூத்து தினம் தினம் அரங்கேறி வருகிறது. அதுவும் காலை முதலே இவர்களது செயல் ஆரம்பமாகின்றது. அண்மையில் அவ்வழியே சென்ற ஒரு பெண்ணிடம் தகராறு செய்து சேலையை பிடித்து இழுத்து அராஜக செயலில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி குடித்துவிட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது போன்ற உச்சபட்ச செயல்கள் நடைபெறுகின்றன. காலை முதல் இரவு வரை கானாற்று பள்ளத்தில் சூதாட்டம், மது, மாதர்களுடன் ஆட்டம் என அனைத்தும் இங்கே நடைபெறுகிறது.

 இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாகாயம் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். ஆனால் பாகாயம் காவல் நிலைய போலீசாரோ அப்பகுதிக்கு ஒரு முறைகூட ரோந்து வருவதில்லை. இருப்பினும் அப்பகுதி இளைஞர்கள் ஒருமுறைக்கு இருமுறை பாகாயம் காவல் நிலையத்துக்கு நேரில்  சென்று தகவலை தெரிவித்தனர். ஆனால் அவர்களோ புகார் எழுதி கொடு பிறகு பார்க்கலாம் என்று தெனாவட்டாக பதிலளித்துள்ளனர். ரோந்து வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் புகார் எதற்காக கேட்கிறார்கள் என்று புரியவில்லை? 
ஆனால், பாகாயம் காவல் நிலையத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் ரோந்து செல்வதில்லை, அவர்களது பிரதான நோக்கம் இரவில் வாகன சோதனை என்ற பெயரில் வழிப்பறி கொள்ளையர்கள் போன்று செயல்படுகின்றனர். குறிப்பாக உதவி ஆய்வாளர் சசிகுமார் கல்லா கட்டுவதை மட்டுமே வேலையாக வைத்துள்ளார். இரவில் வேலைமுடிந்து வீட்டுக்குச் செல்பவர்கள், அவசரமாக வெளியூர் செல்பவர்கள், சிஎம்சி மருத்துவமனை செல்பவர்கள் என அனைவரும் ஆரணி ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். அதனால் அவர் சங்கரன்பாளையம் ஜங்ஷன் ரோட்டில் நின்று கொண்டு அராஜகப் போக்கில் கல்லாகட்டி வருகிறார் என சமூக ஆர்வலர்களும், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். 
   
வேலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஒன்றுதான் பாகாயம் காவல் நிலையம். இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிஎம்சியின் கிளை மனநல மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு எதிரில் உள்ள மலை உச்சியில் 24 மணி நேரமும் திறந்தவெளியில் விபச்சாரம் நடந்து வருகிறது. இந்த மலை காவல் நிலையத்தில் இருந்து மிக மிக அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கெல்லாம் சேலஞ்ச் செய்து மலை மீது ஏறி விபச்சரத்தை தடுக்க முடியவில்லை மகாராசன் சசிகுமார் என்ற உதவி ஆய்வாளரால். ஆனால் காலை, மாலை வேளைகளில் தினமும் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும் நேரங்களில் (பீக் ஹவர்ஸ்) ஜெயமுருகன் திரையரங்கம் எதிரில் உள்ள கோயில் பின்புறம் கள்வர்களை போல பதுங்கி நின்று கொண்டு இருசக்கர வாகனங்களை மட்டும் குறி வைத்து வாகன தணிக்கை என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார். ஏனென்றால் இதில் மட்டுமே பணம் கொட்டுகிறது, பாக்கெட் நிரம்புகிறது. இப்போது கடந்த 3 நாட்களாக துணைக்கு ஒருவராவது அழைத்து வந்து விடுகிறாராம். 

மாலை வேளைகளில் 4 பேர் கொண்ட குழுவாக வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். இத்துடன் சற்று ஓய்வு எடுத்து கொண்டு டிகேஎம் மகளிர் கல்லூரி வளாகத்தின் நுழைவுவாயில் மற்றும் மீண்டும் இதே சங்கரன்பாளையம் ஜங்ஷன் ரோட்டில் பக்கவாட்டில் நின்று கொள்வது என்று, இரவு தினமும் 10.30 மணி முதல் வேகமான வசூல் வேட்டையில் ஈடுபடத் தொடங்கி விடுகிறார். அப்போது கிராமப்புறங்களில் இருந்து லாங்கு பஜாருக்கு காய்கறி மற்றும் பழங்கள், வாழை இலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், கார்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் வசூல் வேட்டையில் கல்லா கட்டுகிறார் சசிகுமார். 
அத்துடன் பொறுப்புள்ள காவல் துறை அலுவலர் போல நடந்து கொள்ளாமல் போக்கிலி போல நடந்து கொள்கிறார். இருசக்கர வாகனத்தில் இருக்கும் சாவியை  பறித்து கொள்வது, வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு வரச் சொல்வது என்று அநாகரீகமான செயல்களில் இவர் ஈடுபடுவதாக புகார்கள் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சட்டம் என்ன சொல்கிறது என்று இவருக்கு தெரியாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. 

இருசக்கர வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டுவதாக கூறப்படும் இவருக்கு, மறுநாளே அல்லது கூடிய விரைவிலோ இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி புத்தகத்தின் நகல் ஆகியவற்றை காண்பிக்க காலஅவகாசம் தரப்பட வேண்டும் என்பது மட்டும் தெரியாமல் போனது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் காக்கிச்சட்டை போட்டவுடன் போதை தலைக்கேறி விடுகிறது இந்த சசிகுமாருக்கு. பல காவல் துறை உயரதிகாரிகள் இருக்கும் இடம் தெரியாமல் சாதனைகள் பல புரிந்து வருகின்றனர். நாட்டுக்காக தன்னுயிர் துறந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்விதமாக இந்த உதவி ஆய்வாளார் சசிகுமார் நடந்துகொள்கிறார்.   

கடைகோடியில் ஒரு சாதாரண சப் இன்ஸ்பெக்டர் ரேங்கில் உள்ள சசிகுமார் இன்னமும் சரியான நபரை சந்திக்கவில்லை போலும். பிரைவேட் கேஸ் என்று ஒன்று உள்ளதை அவர் மறந்துவிட்டார் போலும். அவரது சட்டை கழற்றப்படும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இவரை இழுத்தடித்தால் இவர் படிமானத்துக்கு வந்து விடுவார் என்று பலர் புலம்ப ஆரம்பித்து விட்டனர். பிச்சைக்காரர்கள் அம்மா, ஐயா என்று கேட்கின்றனர். இவர்கள் ரூ.100 கொடு இல்லை ரூ.500 கொடு என்று பொதுமக்களை மிரட்டுகின்றனர். மிரட்டி பணம் பறிக்கும் இவருக்கு (சசிகுமார்) போலீஸ் இளைஞர் படையில் உள்ளவர் துணையாக செயல்படுகிறார்.  இது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், நடுரோட்டில் நின்று அநாகரீகமாக கையேந்துவது வெட்கக்கேடாக உள்ளது. காவல் துறைக்கு என்று உள்ள பெயரை இவர் களங்கப்படுத்தி விடுவார் போலும். இல்லை இப்படி பலருக்கும் தொல்லை கொடுத்தால் நம்மீது புகார்கள் போகும். அதனால் நாம் இடமாற்றம் செய்ப்படுவோம் என்ற நோக்கில் செயல்படுகிறாரா? என்ற சந்தேகமும் ஒருபுறம் எழுகிறது. 

இதில் எது உண்மை என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்தான் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். வேறு எந்த வேலையும் செய்யாமல் வாகன தணிக்கை என்று மட்டும் பொழுதை கழிக்கிறார் சசிகுமார். இப்படி வாகன தணிக்கையை விழுந்து விழுந்து செய்யும் பாகாயம் போலீசார் அதே வாகனம் தொலைந்துவிட்டது என்று புகார் கொடுக்க சென்றால் போதும் எஃப்ஐஆர் போடுவதே இல்லை. அந்த நபரை அலைகழித்து விடுகிறார்கள். வாகன தணிக்கையின்போது லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்சி புத்தகம் இருக்கிறதா என்று அக்கரையுடன் கேட்கும் இவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?. இவர்கள் வாகன தணிக்கை செய்வதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. 

இதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலும். போதை பொருட்களான கஞ்சா, ஹான்ஸ், பான்பராக், சாந்தி போன்றவை தாராளமாக கிடைக்கிறது விற்பனையாகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்காமல், வாகன தணிக்கை மட்டும்தான் பாகாயம் காவல் நிலையத்தின் ஸ்பெஷல் ஒர்க். இதற்காகத்தான் குழுவாக போலீசார் செயல்படுகின்றனர். இவர்கள் காவல் நிலைய எல்லையில் நடக்கும் சமூக விரோத செயல்களான விபச்சாரம், திறந்தவெளியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது, போதை பாக்குகள், கஞ்சா விற்பனையை தடுக்க முடியாதவர்கள் இவர்கள். அதை முடித்து விட்டு வாகன தணிக்கைக்கு வரலாமே இவர்கள் என்று வேலூர் மாநகர மக்கள் பேசிக் கொள்கின்றனர். 

அண்மையில் சமுதாய பொறுப்பில் வேலை பார்க்கும் நபர் ஒருவர், வாகன சோதனையின் போது ஞிலி இல்லை எனவே பைன் கட்டுகிறேன், நான் அவசரமாக செல்லவேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஃபைன் வாங்க மறுத்து, வண்டியை 30 நிமிடத்திற்கு மேல் நிற்க வைத்துள்ளார் நம் உதவி ஆய்வாளர் சசிகுமார். தம்பி நீ என்னிடம் பேசவேண்டும் என்று தனி ஒருவன் படம் போன்ற நிகழ்வுதான் நடைபெற்றது. ஃபைன் கட்டினாலும் வண்டியை விட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று மிரட்டியுள்ளார். 

அவரது நோக்கம் வாகனசோதனை என்ற பெயரில் கல்லாகட்டுவது, அந்நபரோ நான் ஃபைன் கட்டுகிறேன் ரூ.500, ரூ-.1000 ஆனாலும் சரி என்று கூறியது அவருக்கு ஏமாற்றமானது.  ரூ.300 கொடுத்துவிட்டு செல் என்று பேரம் பேசியுள்ளார், ஆனால் அந்நபர் வேண்டாம் நான் முழுத்தொகை ஃபைன் கட்டுவேனே தவிர கப்பம் கட்டமாட்டேன், நீங்கள் வேண்டுமென்றால் வாகனத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நான் நீதிமன்றம் வாயிலாக வாகனத்தை எடுத்துக் கொள்கிறேன், நான் அவசரமாக செல்லவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் அதை விடுத்து அந்நபரை நீண்ட நேரம் காக்க வைத்துள்ளார். 

பின்பு அந்நபர்,  இது சட்டப்படி குற்றச்செயல், கோர்ட்டில் நீங்கள் பதிலளிக்க வேண்டிவரும் என்ற வாக்குவாதத்துக்கு பின்பே இருசக்கர வாகனத்தை கொடுத்துள்ளார். காவல்துறை உங்கள் நண்பன் என்பது மாறி அவர்களே மிரட்டும் வேலையில் ஈடுபடுகின்றனர் என்பது மிகவும் ஜனநாயக படுகொலையாகும். மக்கள் ஏதேனும் பிரச்னையென்றால் அவர்கள் நம்பி நாடிச்செல்லும் ஓர் இடம் காவல்துறை. ஆனால் பொதுமக்களே பயந்து செல்வதாகத்தான் உள்ளது. இதை நினைத்தால் மிகவும் தலைகுனியவேண்டிய ஒன்றாகத்தான் உள்ளது. வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையும், வருமான வரித்துறையினரும் சோதனை நடத்த வேண்டும். இவர் தினமும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கல்லா கட்டிக் கொண்டுதான் அந்த இடததை விட்டு அகலுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதுபோன்ற வசூல் வேட்டைக்காரரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இல்லையெனில் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மீது  எடுக்கும் நடவடிக்கைதான் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label