OUR CLIENTS
கணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்!
கணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்! Posted on 15-Jun-2017 கணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்!

சென்னை, ஜூன் 15-
 சென்னை மணலி, ஆசைத்தம்பி தெருவை சேர்ந்தவர் கணேசன் (34). இவரது மனைவி நாகலட்சுமி (27). இவர்களுக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

கடந்த 2 மாதத்திற்கு முன்பு, தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் கணேசன் கைதாகி புழல் சிறையில் இருந்தார். இதையடுத்து, கணேசன் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு, நேற்று பகல் 2.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. கணேசனுக்கு ஜாமீன் வாங்குவதற்கு நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி நாகலட்சுமி பகல் 12 மணிக்கே நீதிமன்றத்திற்கு வந்து காத்திருந்தார். 

அப்போது, 1 மணிக்கு திடீரென நாகலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்தவர்கள் நாகலட்சுமியை உடனே மருத்துவமனைக்கு அழைத்தனர். ஆனால் நாகலட்சுமி, ‘‘எனது கணவருக்கு ஜாமீன் கிடைத்தால்தான் நான் இங்கிருந்து வருவேன். இங்கேயே குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை’’ என்று கூறிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமியின் வழக்கறிஞர் விநாயகமூர்த்தி அங்கிருந்த நீதிபதி பிரேமாவதியிடம் சென்று நடந்த விபரத்தை கூறினார். இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வழக்கை விசாரித்து கணேசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். ஜாமீன் உத்தரவு கிடைத்த பிறகு, அங்கிருந்த வக்கீல்கள் நாகலட்சுமியை ஆட்டோ மூலம், மணலி மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிறிது நேரத்தில் நாகலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Label