OUR CLIENTS
ஆந்திராவில் 6 நிறுவனங்கள் ரூ.3,800 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க அனுமதி
ஆந்திராவில் 6 நிறுவனங்கள் ரூ.3,800 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க அனுமதி Posted on 15-Jun-2017 ஆந்திராவில் 6 நிறுவனங்கள் ரூ.3,800 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க அனுமதி

ஐதராபாத், ஜூன் 15-
ஆந்திராவில் புதிதாக தொழில் தொடங்க 6 நிறுவனங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அனுமதி அளித்துள்ளார். இதற்கான ஒப்பந்தங்கள்   கையெழுத்திடப்பட்டன.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் ஆந்திராவில் உருவாகி வருகின்றன.
இப்போது புதிதாக தொழில் தொடங்க 6 நிறுவனங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அனுமதி அளித்துள்ளார். இதற்கான ஒப்பந்தங்கள் நேற்று முன்தினம் கையெழுத்திடப்பட்டன. 

இதன்படி கே.சி.பி., செட்டி நாடு சிமெண்டு, ரெயின் குரூப், மோகன் ஸ்பின்டெக்ஸ், இன்டோ கவுண்ட், விஸ்வா அப்பரல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தொடங்குகின்றன.  இந்த 6 நிறுவனங்களும் சேர்ந்து ரூ.3 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்கின்றன. இதன் மூலம் புதிதாக 5 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதில், செட்டிநாடு சிமெண்டு தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1,350 கோடி முதலீட்டில் 2 சிமெண்டு தொழிற்சாலைகளை அமைக்கிறது. விசாகப்பட்டினம் அருகிலும், குண்டூரிலும் இந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் செயல்பட தொடங்கும்.  அதே போல் ரெயின் குரூப் நிறுவனம் ரூ.1,046 கோடி முதலீட்டில் விசாகப்பட்டினத்தில் உள்ள அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பெட்ரோலிய பொருட்கள் ஆலை, சிமெண்டு தொழிற்சாலை, மின் நிலையம் ஆகியவற்றை அமைக்கிறது.  கே.சி.பி. சிமெண்டு நிறுவனம் கிருஷ்ணா மாவட்டம் சக்கைய பேட்டையில் ரூ.531 கோடி முதலீட்டில் சிமெண்டு ஆலை அமைக்கிறது.

இன்டோ கவுண்ட் நிறுவனம் ரூ. 250 கோடி முதலீட்டில் நூற்பாலை, துணி ஆலை ஆகியவற்றை அமைக்கிறது. மோகன் ஸ்பின்டர்ஸ் நிறுவனம் ரூ.611 கோடி முதலீட்டில் ஜவுளி ஆலைகளை அமைக்கிறது.  அதேபோல் விசுவா அப்பரல்ஸ் நிறுவனம் ரூ.23 கோடி முதலீட்டில் ஆயத்த ஆடை நிறுவனத்தை அமைக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆந்திர மாநில தொழில் மேம்பாட்டு கழகம் செய்து வருகிறது. இதன் தலைவராக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே இது சம்பந்தமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நடத்தப்பட்ட தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 1569 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு ஆந்திராவில் முதலீடு வரும். 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.  சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி உள்ளார். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2016 ஒப்பந்தத்தின்படி இதுவரை 332 தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளன. ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் கோடி முதலீடு வர உள்ளது.

Label