OUR CLIENTS
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இறுதிசுற்றை அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: தீபா கர்மாகர்
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இறுதிசுற்றை அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: தீபா கர்மாகர் Posted on 09-Aug-2016 ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இறுதிசுற்றை அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: தீபா கர்மாகர்

ரியோ :
ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார்.


பிரேசிலில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் தகுதி சுற்று இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறியது. இதில் வால்ட், அன்ஈவன் பார்ஸ், பேலன்ஸ் பீம், புளோர் எக்சர்சைஸ் ஆகிய பிரிவுகளில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது சாகசங்களை காட்டி மெய்சிலிர்க்க வைத்தனர்.

இந்திய இளம் புயல் தீபா கர்மாகரும் இந்த பந்தயத்தில் அடியெடுத்து வைத்தார். நான்கு பிரிவுகளிலும் தீபா கர்மாகர் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், வால்ட்டில் மட்டும் அவரது சாகசஜாலம் பிரமாதமாக அமைந்தது.

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய தீபா கர்மாகர் இப்போது, தனிநபர் வால்ட்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற சரித்திர நிகழ்வுக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

தனது அறிமுக ஒலிம்பிக்கிலேயே அமர்க்களப்படுத்தியுள்ள தீபா கர்மாகர் கூறுகையில், ‘இறுதிசுற்றை அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இதை விட நான் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். ஏனெனில் பயிற்சியின் போது நான் இதை காட்டிலும் நன்றாக செயல்பட்டேன். ‘புரோடுனோவா’ பிரிவின் போது அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். என்னை கவர்ந்த ஒரு வீராங்கனை அவர். அவருடன் இணைந்து போட்டியிட்டதை நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது’ என்றார்.

‘புரோடுனோவா’ வால்ட்டில் அவர் கீழே உட்கார்வது போன்று கால்களை ஊன்றினார். நேராக நிற்பது போல் கால்களை பதிய வைத்தால் அதிக புள்ளிகள் கிடைக்கும். இத்தகைய தவறை மட்டும் அவர் களைந்தால் இறுதிப்போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்று பயிற்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தீபா கர்மாகரின் தந்தை துலால் கர்மாகர் கூறும் போது, ‘தீபா கர்மாகர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தகவல் இன்று காலை (நேற்று) கிடைத்தது. பதற்றம் காரணமாக இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எங்கள் வீட்டில் நிறைய உறவினர்கள் குவிந்திருந்தனர். இரவு முழுவதும் டி.வி. முன்பே தவம் கிடந்தோம். ஆனால் தீபாவின் போட்டியை டெலிவிஷனில் முழுமையாக ஒளிபரப்பு செய்யாதது ஏமாற்றம் அளித்தது. இப்போது மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறோம். அவரது சாதனை எங்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரையும் குறிப்பாக திரிபுரா மக்களை உற்சாகப்படுத்தக்கூடியது’ என்றார்.

தீபாவின் தாயார் கவுரவ் தேவி பேசும் போது அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது ‘எங்களது நீண்ட கால கனவு நனவாகி உள்ளது. தீபாவுக்கு இன்று பிறந்த நாள். அவர் சிறப்பாக செயல்பட வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்ய இருக்கிறேன்’ என்றார்.

Label