OUR CLIENTS
இரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்!
இரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்! Posted on 19-Jun-2017 இரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்!

வேலூர், ஜூன் 19-
முதல் நிலைக் காவலராக பணியாற்றி 5 ஆண்டுகள் வரை தண்டனை ஏதுமின்றி பணியாற்றினால், தலைமைக் காவலர் ஆக பதவி உயர்வு பெறுவார்கள். அப்போது காக்கிச் சட்டையில் 3 கோடு கொடுப்பார்கள். இதன் பின்னர் 10 வருடம் பணியாற்றினால் அதாவது மொத்தம் 25 வருட சர பணியாற்றினால் மட்டுமே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்ற பதவி உயர்வு கிடைக்கும். இந்த 25 ஆண்டுகால பணி காலத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகின்றனர். அதை கானாவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளனர்.

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக் குறைவான ஊதியம் காவல்துறையினருக்குக் கொடுக்கப்படுகிறது. அதாவது தெலுங்கானாவில் கான்ஸ்டபிள் ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ16,400. ஆனால் தமிழகத்தில் ஒரு கான்ஸ்டபிளின் அடிப்படை சம்பளம் ரூ5,200. 2 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் மொத்தமே ரூ18,000 சம்பளம்தான் கான்ஸ்டபிளுக்கு கிடைக்கிறது. சப் இன்ஸ்பெக்டருக்கு தெலுங்கானாவில் சம்பளம் ரூ28,940 ரூபாய். ஆனால் தமிழகத்தில் சப் இன்ஸ்பெக்டரின் சம்பளமே 9,300 ரூபாய் மட்டும்தான் கிடைக்கும்.
தமிழக காவலர்கள் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் பணியின் போது தாக்குதல்களுக்கு உள்ளாகி இறப்பவர்களை விட தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களின் எண்ணிக்கை அதிகம்.

என்று இந்திய அளவில் காவல்துறையில் நிகழும் தற்கொலைகள், மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 24 மணிநேரமும் காவலர்களாக மட்டுமே வாழும் பணிச் சூழல்தான் காவலர்களின் முதல் எதிரி. குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், நண்பர்களுடன் இணைந்திருத்தல், பொழுதுபோக்கு, சமூகக் கலப்பு என சராசரி குடிமக்கள் அனுபவிக்கும் உரிமைகள் காவலர்களுக்கு மறுக்கப் படுகிறது.

பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் அவர்கள் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்க வில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொலைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள். குடும்பத்துடன் நேரம் செலவழிக்காததால் எந்த பிடிப்பும் இல்லாத நிலைக்கு காவலர்கள் தள்ளப்படுகின்றனர்.

வேலைக்காகச் செல்லும் இடத்தில், கிடைத்ததை எந்த நேரத்திலும் சாப்பிட வேண்டிவரும். உடல் மீது அக்கறை செலுத்த முடியாது. முறையற்ற உணவுப் பழக்கம் நோய்களுக்கு வித்திடுகிறது. தவறான வாழ்க்கை முறையால் வரும் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தப் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். முறையான உடற்பயிற்சி செய்ய முடியாது. நேரத்திற்கு தூங்க முடியாது. அதிக நேரம் நின்று வேலை செய்வதால், எலும்பு தொடர்பான நோய்கள் தாக்குகின்றன. மது மற்றும் இதர போதைப் பழக்கங்களால் கல்லீரல் நோய்களும் அதிகம் பாதிக்கிறது.
சென்னையில் உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியாற்றிய பெண் காவலர் சீதா, மஞ்சள் காமாலை நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஸ்டாலின் மருத்துமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். ஆய்வாளரிடம் சிகிச்சைக்காக விடுமுறை கேட்டும் தராமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் நோயின் தாக்கம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் மற்ற மாநிலங்களில் கொலை,கொள்ளை தான் அதிகமாக நடக்கும். ஆனால் இங்கோ அரசியல்வாதிகள் பிரச்சனை தலைவிரித்தாடுவதாலேயே காவல்துறைக்கு 24மணி நேரமும் பணி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சட்டசபை தேர்தல் முதல் போயஸ்கார்டனுக்குள் தீபா நுழைந்தது வரை ஒயாத பணிதான் காவலர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதுவும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளான செப்டம்பர் 22, 2016 முதல் அவர் மரணமடைந்து உடல் அடக்கம் செய்யப்பட்ட டிசம்பர் 6 2016வரை ஓய்வற்ற பணியால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் 30 பேர் வரை மரணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கிறது காவலர் ஒற்றுமை என்ற முகநூல் பக்கம்.

காவலர்களுக்கு தங்கள் உரிமைகளைக் கேட்க அமைப்பு கிடையாது. எனவேதான் எல்லா கோபங்களையும் மக்களிடம் காட்டுகின்றனர். நாட்டின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு என மக்களை நேரடியாகச் சந்திக்கும் துறை இது. காவலர்களின் பிரச்னையை மேலோட்டமாகப் பார்க்காமல், அவர்களின் தேவைகள் என்ன, அவற்றை நிறைவேற்றுவது எப்படி என ஆக்கப் பூர்வமாக செயல்பட வேண்டியது அரசின் கடமை. யானைகளுக்கு புத்துணர்வூட்ட ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம்கள் நடத்தும் தமிழக அரசு, காவல்துறையினரின் மனநலத்தைக் காக்க கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

காவல்துறை என்ற பில்டிங் ஸ்ட்ராங்காக இருப்பதற்கு ஐ.பி.எஸ்.கள் மட்டும் காரணமல்ல, இரண்டாம் நிலை, முதல்நிலை, தலைமை காவலர்களும்தான் எனவே அவர்களுக்கு ஊதிய உயர்வு, அவ்வப்போது ஓய்வு, ஷிப்ட் முறை அமல்படுத்தினால் மட்டுமே அவர்களால் நிம்மதியாக பணி செய்ய முடியும். வரும் ஜூலை 6, 7 தேதிகளில் காவல்துறை மானியக்கோரிக்கையின் போது தங்களின் கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும் என்பதே காவலர்களின் கோரிக்கையாகும்.

காவல்துறையினர் லஞ்சம் வாங்குகின்றனர் என்றும், அவர்கள் பணி நேரத்தில் அசந்து உறங்குவதையும் புகைப்படம் எடுத்து ஊடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் மன உளைச்சலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எந்த நேரத்திலும் நாங்கள் தமிழ்நாடு தழுவிய மிகப்பெரிய காவலர்கள் ஊதிய போராட்டம் தொடங்கப் போவதாகவும், குடும்பத்திலுள்ள நபர்களின் ஆதார்கார்டுகள்,தேர்தல் அடையாள அட்டைகுடும்ப அட்டை,பெட்ரோல் போட கூட முடியாததால் வாகன லைசென்ஸ் போன்றவற்றை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் முகநூல் பக்கத்தில் கொதிப்புடன் பதிவிட்டுள்ளனர். காவல்துறையினர் புரட்சி செய்ய தயாராகி வருவதையே இது காட்டுகிறது. 

காவல்துறை மானியக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label