OUR CLIENTS
ஜனாதிபதி தேர்தல் - எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
ஜனாதிபதி தேர்தல் - எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி Posted on 23-Jun-2017 ஜனாதிபதி தேர்தல் - எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

சென்னை, ஜூன் 23-
ஜனாதிபதி தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ம் தேதி முடிவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தனக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்தித்து அவர் ஆசி பெற்றார்.

அவருக்கு மாநில கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ராம்நாத் கோவிந்த் 70 சதவீதம் வாக்குகளுக்கும் மேல் பெற்று வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது.  இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வரும், அ.தி.மு.க. அம்மா அணியின் தலைமை நிலைய செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை எங்கள் பொதுச் செயலாளர் சசிகலாதான் அறிவிப்பார் என்று கூறி வந்தனர்.  அ.தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளான இப்தார் விருந்தை எடப்பாடி தலைமை ஏற்று நடத்தியதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் நேற்று முன்தினம் மாலை அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அடுத்தக் கட்டமாக எம்.ஜி.ஆர். பிறந்த தின நூற்றாண்டு விழாவையும் எடப்பாடி பழனிசாமி இந்த மாத இறுதியில் இருந்து நடத்தப்போவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஏற்க மறுத்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர்களான தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் நேற்று  இது தொடர்பாக கூறுகையில், “எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம்” என்றனர். கட்சியில் டி.டி.வி. தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளனர்.   எடப்பாடி பழனிசாமி மீண்டும் எங்களை புறக்கணித்தால் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.  எடப்பாடி பழனிசாமி மீதுள்ள கோபத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, தங்களுக்கு பிடித்தவருக்கு வாக்களிக்க முடியும்.  கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவிட முடியாது. இந்த விதியை பயன்படுத்தி டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு எதிராக செயல்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் தொடர்ந்து எடப்பாடியை எதிர்ப்பதால் கட்சி நிர்வாகத்திலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை பொறுத்து இந்த குழப்பங்கள் தீருமா, அல்லது தீவிரமாகுமா என்பது தெரிய வரும்.  மத்தியில் அசுர பலத்துடன் உள்ள பா.ஜ.க.வை பகைத்துக் கொண்டு இனி ஆட்சியை நடத்த இயலாது என்ற நிலை அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. புதிய திட்ட ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு போன்றவைகளில் தமிழக மக்கள் நலனுக்காக மத்திய அரசை அ.தி.மு.க. அனுசரித்து செல்லத் தொடங்கி உள்ளது.  இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களால் அதற்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இந்த வி‌ஷயத்தில் பிடிவாதம் பிடிக்காமல் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுக்கு பணிந்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது. 

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறப்போவது உறுதியாகி விட்டாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் அணி நிறுத்தும் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். எனவே சிறு, சிறு மாநில கட்சிகளையும் விடாமல் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.  அந்த வகையில் தமிழகத்தில் அ.தி.மு.க.விடம் 50 எம்.பி.க்கள், 135 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அ.தி.மு.க. வாக்குகளை மிக முக்கிய மனதாக பா.ஜ.க. தலைவர்கள் பார்க்கிறார்கள். அ.தி.மு.க.வின் அனைத்து வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் பெற்று விட வேண்டும் என்பதே அவர்களது இலக்காக உள்ளது. தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 135 பேர் உள்ளனர். இவர்களில் 123 பேர் எடப்பாடியின் அ.தி.மு.க. அம்மா அணியிலும், 12 பேர் ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியிலும் உள்ளனர்.   ஜனாதிபதி தேர்தலில் தமிழக எம்.எல்.ஏ.யின் ஓட்டு மதிப்பு 176 ஆகும். அந்த அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க.வின் மொத்த ஓட்டு மதிப்பு 23,760 வாக்குகள் ஆகும். இதில் அ.தி.மு.க. அம்மா அணிக்கு 21,648 வாக்குகள் இருக்கிறது.  ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியிடம் 2,112 வாக்குகள் உள்ளது. அ.தி.மு.க. அம்மா அணியில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 34 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களது வாக்குகள் மதிப்பு 5,984 ஆகும். இந்த வாக்குகள் சிதறக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி பா.ஜ.க. கொஞ்சமும் கவலைப்படவில்லை.   எடப்பாடியிடம் உள்ள 89 எம்.எல்.ஏ.க்களின் 15,664 வாக்குகளும், ஓ.பி.எஸ்.சிடம் உள்ள 12 எம்.எல்.ஏ.க்களின் 2,112 வாக்குகளும் ஆக மொத்தம் 17,776 வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. எனவே பா.ஜ.க.விடம் மோதல் போக்கை விரும்பாத டி.டி.வி.தினகரன் கடைசி நிமிடத்தில் எடப்பாடி பழனிசாமி முடிவை ஏற்பார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Label