OUR CLIENTS
நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்! பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்! பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் Posted on 28-Jun-2017 நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்! பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூன் 28-
நதி நீர் இணைப்புத் திட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென, இந்திய பிரதமர்  மோடிக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். 

மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதம்: அண்டை மாநிலங்களில் இருந்து உரிய நீரினை பெறுவதற்கு போராட்டம், பொய்த்து விட்ட பருவ மழை மற்றும் மோசமான வறட்சி போன்றவை விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களது வாழ்வாதாரத்தினையும் பெரிதும் பாழ்ப்படுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் தமிழகத்திற்கு கிடைக்கும் நீர்பாசன ஆதாரங்களை முடக்குவதும், மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் ஒப்பந்தங்களை மீறி அநியாயமாக தடுப்பணைகள் கட்டுவதும் அண்டை மாநிலங்களின் எதேச்சதிகாரமான போக்காக மாறி வருகிறது.   தற்போதைய சூழலில், நாட்டின் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற நதிநீர் இணைப்பு மட்டுமே காலத்தின் கட்டாயம் என்பதையும், நீண்ட காலத்தீர்வு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

1972 இல் மத்திய நீராதார அமைச்சர் கே. எல். ராவ் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் முன் வைத்த நதி நீர் இணைப்புத் திட்டம் பற்றிய விரிவான அறிக்கையை இந்த நேரத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் அந்த அறிக்கையின் மீதான  தொடர் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமான தீர்வை இதுவரை எட்டவில்லை. இடையில் நதி நீர் இணைப்புக்கென உருவாக்கப்பட்ட சிறப்பு பணிக்குழு (Special tack force) கலைக்கப்பட்டது. இறுதியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தில் ஒரு பிரிவின் (cell) கீழ் அப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  திமுக தலைவர்  கலைஞர்  தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் இரு முறை நதி நீர் இணைப்புத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி கூறியிருக்கிறார்.  தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, மாநிலத்தின் இரு நதிகளை இணைக்கும் திட்டத்தை முதற்கட்டமாக தொடங்கினார். முதலாவதாக, ரூ.189 கோடி மதிப்பில் “காவேரி & குண்டாறு” நதிகளை இணைக்கும் திட்டம். இரண்டாவதாக, ரூ.369 கோடி மதிப்பிலான, “தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு” இணைப்புத்திட்டம் ஆகியவற்றைத் தொடங்கினார்.  

விவசாய முன்னேற்றத்திற்கு நதி நீர் இணைப்பினை நடைமுறைபடுத்துவது மிக முக்கியமானதாகும். மாண்புமிகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா அவர்களின் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, “நதி நீர் இணைப்பு வறட்சி பாதிப்பு மண்டலங்களில் வசிக்கும் மக்களை பசியிலிருந்து காப்பாற்றவும், வெள்ளப் பெருக்கெடுக்கும் பகுதிகளை சார்ந்த மக்களை அழிவில் இருந்து பாதுகாக்கவும் உதவும்” என்று “2012 நதி நீர் இணைப்பு தீர்ப்பில்” சுட்டிக்காட்டியிருக்கிறார். 

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீர்ப்பில், நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அந்த வெள்ளிக்கோடுகள் போன்ற முக்கிய வரிகளில் நதி நீர் இணைப்புத் திட்டத்தின் முழு அவசியமும் பிரதிபலிக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நதி நீர் இணைப்புத் திட்டம் பற்றிய தீர்ப்பில், இந்த திட்டத்தை நிறைவேற்ற 16 கட்டளைகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதுவரை 8 கூட்டங்களை நதி நீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து கூட்டி விவாதித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஒருமாநில நதிகளை இணைப்பதோடு ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் பாயும் நதிகளையும் இணைப்பது அவசியம்.  நதி நீர் இணைப்புத் திட்டம் தேசத்துக்கான, தேசத்தால் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய திட்டம். இதனால் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கும், பல்வேறு தரப்பினருக்கும் மிகுந்த பயனளிப்பதாக இத்திட்டம் அமையும்.

 உன்னதமான இந்த திட்டத்தை நிறைவேற்றுவன் மூலம் , மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகள் தீர்வதோடு, அண்டை மாநிலங்களுக்கு இடையில் அமைதி நிலவி, தேசிய ஒருமைப்பாட்டினை மேலும் வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரம் மேம்படவும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால் நதி நீர் இணைப்புத் திட்டங்களில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

Label