OUR CLIENTS
விழுப்புரம் கல்லூரிச் சாலையை மேம்படுத்தும் பணி விரைவில் தொடக்கம்!
விழுப்புரம் கல்லூரிச் சாலையை மேம்படுத்தும் பணி விரைவில் தொடக்கம்! Posted on 28-Jun-2017 விழுப்புரம் கல்லூரிச் சாலையை மேம்படுத்தும் பணி விரைவில் தொடக்கம்!

விழுப்புரம், ஜூன் 28-
குண்டும் குழியுமான விழுப்புரம் கல்லூரிச் சாலையை மேம்படுத்தும் பணிக்காக லட்சுமணன் எம்பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.43 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி ஓரிரு நாளில் தொடங்கவுள்ளது.

விழுப்புரம் கல்லூரிச் சாலை, கிழக்குப் பாண்டி சாலையிலிருந்து மாதா கோயில் வழியாக கீழ்ப்பெரும்பாக்கம் கண்ணகி தெரு வரை நீள்கிறது. சுமார் 850 மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலையில், ஏராளமான குடியிருப்புகள், குடிசை வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. இந்த சாலை அமைந்துள்ள இடம் ரயில்வேக்குச் சொந்தமானது என்பதால், தார்ச்சாலை அமைத்து அதனை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து முட்டுக்கட்டை போட்டுவந்தது. கீழ்ப்பெரும்பாக்கத்துக்குச் செல்லும் பிரதான சாலைகளில் ஒன்றான இந்த சாலையில் குண்டும் குழியுமாக மாறிய போதிலும், அதில் அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

 இதனிடையே, இச்சாலையை மேம்படுத்தக் கோரிஅப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்ததையடுத்து, சுமார் 25 ஆண்டுகளாக நீடித்த இப்பிரச்னைக்கு தற்போது விடிவு வந்துள்ளது. கல்லூரிச் சாலையை மேம்படுத்தி தார்ச்சாலை அமைக்க விழுப்புரத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து, சாலை அமைக்கத் தேவையான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சாலையின் கீழே செல்லும் புதைச் சாக்கடையின் மேல் மூடிகளின் உயரத்தை, புதிதாக அமைக்கப்பட உள்ள தார்ச் சாலைக்கு இணையாக உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து இரா.லட்சுமணன் எம்.பி. கூறியதாவது: கல்லூரிச் சாலையை தார்ச் சாலையாக அமைக்க முதல்கட்டமாக , எம்.பி. நிதியிலிருந்து ரூ.32 லட்சம் ஒதுக்கினேன். இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேசி, சாலையை கூடுதல் தரத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, மேலும் ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, மொத்தம் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில், சாலை அமைக்கப்பட உள்ளது. எளிதில் சேதமடையாத வகையில், முதலில் ஜல்லி கலவை, அதன்பிறகு சிமென்ட் கலவை, அதன்மேலே தார் என சாலை தரமான வகையில் அமைக்கப்படும். தற்போதுள்ள சாலையிலிருந்து சுமார் ஒரு அடி வரை சாலை உயரம் அதிகரிக்கும். 

இதனால் குண்டும் குழியுமாவது தவிர்க்கப்படும். தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ஓரிருநாளில் தொடங்கும் என்றார். கல்லூரிச் சாலை புதிதாக அமைக்கப்பட்டால் அப்பகுதி மக்களுக்கு மட்டுமன்றி, ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணி காரணமாக மாற்றுப் பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பயனளிக்கும்.

Label