OUR CLIENTS
வாரிசு அரசியலை புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்...! எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் விளக்கம்
வாரிசு அரசியலை புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்...! எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் விளக்கம் Posted on 29-Jun-2017 வாரிசு அரசியலை புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்...! எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் விளக்கம்

சென்னை, ஜூன் 29-
தினகரனுக்கு பதவி வழங்கி அதிமுகவிற்குள் வாரிசு அரசியலை புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம் என சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.

சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. (அம்மா) அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக  இருக்கிறார். சசிகலா சிறை சென்ற பிறகு அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை ஏற்றார்.

தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் பணிகளை கவனிக்கும் பொறுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். வழக்கில் ஜாமீன் பெற்று டில்லியில் இருந்து சென்னை திரும்பிய டி.டி.வி. தினகரன், கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரது வருகையை விரும்பவில்லை. இதனால் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள்ளேயே புகைச்சலும், எதிர்ப்பும் உருவானது.

யார் தலைமையில் இயங்குவது? என்பதில் அ.தி.மு.க. (அம்மா) அணியில் தினகரன்-&எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இந்த பனிப்போர் வலுத்து இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் தற்போது மாறி மாறி வெறுப்பு கருத்துகளை வெளியிட தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்று கொண்டு இருந்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்) ராமச்சந்திரன் (குன்னம்), கனகராஜ் (சூலூர்), சண்முகம் (கிணத்துக்கடவு), பாண்டியன் (சிதம்பரம்), கஸ்தூரி வாசு (வால்பாறை) அம்மன் அர்ஜுன் (கோவை தெற்கு) ஆகியோர் கூட்டாக வெளியில் வந்தனர்.
அப்போது முருகுமாறன், ராமச்சந்திரன் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது; அ.தி.மு.க.வை அழிக்கக்கூடிய யாரும் கட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்சியின் நலனுக்காக உழைத்து வருகிறோம்.  தேவை இல்லாமல் வெற்றிவேல் எம்.எல்.ஏ. பேசக் கூடாது. 

பொதுச் செயலாளரை பொது உறுப்பினர் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச் செயலாளர் பதவிக்கான விதி என்ன என்பது எங்களுக்கு தெரியும். அதனை வெற்றிவேல் சொல்லி தர வேண்டியதில்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி. ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி தங்களது வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை.  ஆர்.கே. நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. பொதுச் செயலாளர் சிறைக்கு சென்ற பிறகு அவரது உறவினரை கட்சி பதவியில் நியமித்தது தவறானதாகும். வாரிசு அரசியலை அதிமுகவிற்குள் புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம். 

ஆர்.கே.நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் படத்தை போட்டோ பெயரை சொல்லியோ யாரும் ஓட்டு கேட்கவில்லை. அப்போது அங்கு மாவட்ட செயலாளராக வெற்றிவேல்தான் இருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த அடிப்படையில் வெற்றிவேல் புறக்கணித்தார். அதைப் போலவே, சசிகலாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். அப்போது அவர் என்ன செய்தார்? இப்போது அவர் எங்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

 இந்த பேட்டியின் போது மற்ற எம்.எல்.ஏக்கள் உடன் இருந்தனர். முன்னதாக நேற்று முன்தினம் பேட்டி அளித்த வெற்றிவேல் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு கட்சி விதிகள் தெரியவில்லை என்று கூறி இருந்தார். சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பதாகவும் தொடர்வதாகவும் அவர் பேசி வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் நேற்று வெற்றிவேலுக்கு எதிராக பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Label