OUR CLIENTS
நுங்கம்பாக்கத்தில் குப்பை தொட்டி பக்கத்தில் முளைத்துள்ள சுகாதாரமில்லாத சூப்பு கடை!
நுங்கம்பாக்கத்தில் குப்பை தொட்டி பக்கத்தில் முளைத்துள்ள சுகாதாரமில்லாத சூப்பு கடை! Posted on 30-Jun-2017 நுங்கம்பாக்கத்தில்  குப்பை தொட்டி பக்கத்தில்  முளைத்துள்ள சுகாதாரமில்லாத சூப்பு கடை!

 சென்னை, ஜூன் 30-
சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் ஹைரோட்டில் குப்பை தொட்டி அருகே சுகாதாரம் இல்லாமல் சூப்பு கடை இயங்கி  வருகிறது. இதை மாநகராட்சி அலுவலர்கள் கண்டும் காணாமல் குறட்டை விட்டு வருகின்றனர். 

சென்னை நுங்கம்பாக்கம் என்றாலே சுத்தம் சுகாதாரம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் வைத்துள்ளனர் மாநகராட்சி அலுவலர்கள். இந்தநிலையில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் ஹைரோடு அருகே சுகாதாரமில்லாமல் குப்பை தொட்டியை ஒட்டியே சூப்பு கடை திடீரென்று முளைத்துள்ளது. இந்த கடை கடந்த 20 நாட்களாக காணாமல் போயிருந்தது. இப்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தினமும் மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணி வரை இந்த சூப்பு கடை படுபிசியாக இயங்குகிறது. இங்கு சூப்பு சாப்பிட்டுச் செல்லுவோருக்கு பலவகையான வயிறு தொடர்பான தொற்று நோய்கள் பரவுகின்றன. 

இதனால் சூப்பு விற்கும் இடம் திறந்த அடியாகவும் நடைபாதையை ஆக்கிரமித்தும் இருப்பதால் மாலை வேளையில் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்க காரணமாக அமைகிறது. சூப்பு சாப்பிட வரும் நபர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் வாகனங்கள் செல்ல தடையாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். 

நுங்கம்பாக்கம் போலீசார் இந்த சூப்பு கடையை இயக்க ஒரு தொகையை பெற்றுக் கொண்டதாகவும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்த், சென்னை மாநகராட்சி 110வது வார்டு, 9&வது மண்டலத்துக்கு உட்பட்ட மண்டல அலுவலர் குணசேகரன் ஆகியோர் இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு இந்த சூப்பு கடையை அப்புறப்படுத்தவும், நிரந்தரமாக இந்த கடை செயல்படாமலும் பார்த்து கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 

ஆனால் யாரோ இந்த சூப்பு கடைக்கு கூட பின்புலமாக இருந்து செயல்படுவது மட்டும் தெரிகிறது. அகற்றப்பட்ட சூப்பு கடை மீண்டும் அதே இடத்தில் முளைக்க காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. அனைத்திலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கையூட்டு என்று ஒழிகிறதோ அன்றுதான் நாடு முன்னேற்றம் அடையும். இதை முறைப்படுத்த அரசு அலுவலர்கள், காவலர்கள் முனைந்து வருகின்றனர். இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு மாமூல் கொடுப்பதாக அந்த சூப்பு கடை நடத்தும் நடைபாதை வியாபாரி தம்பட்டம் அடித்து கொள்வது மிகவும் வருந்தத்தக்கதாகும். காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கு இந்த சொல் அர்ப்பணம் செய்யப்படுகிறது. மாமூலுக்காக பந்தி விரிக்கும் துறையாக காவல் துறை மாறிவருவது மனதுக்கு சற்று கனமாக உள்ளது. பல நல்ல அதிகாரிகள் பணியாற்றி பெருமை சேர்த்த துறை இன்றைக்கு தலைகுனிய காரணமாக பணியாற்றுகின்றனர் சில கருப்பு ஆடுகள் என்று சொன்னால் அது மிகையாகாது. 

பணத்துக்கு ஆசைப்பட்டு கடமையில் இருந்து தவறும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தெரிந்தே தவறு செய்பவர்களுக்கு மன்னிப்பு தரக்கூடாது என்பதை மனதில் வைத்து உயர்அலுவலர்கள் செயல்பட வேண்டும். 

இனி இதுபோன்ற சுகாதாரமில்லாத பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சூப்பு கடையை அப்புறப்படுத்த மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க  வேண்டும் என்பதுதான் நுங்கம்பாக்கம் பகுதிவாழ் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். இதற்கு பின்னரும் மெத்தனம் காட்டினாலோ, தெனாவெட்டாக செயல்பட்டாலோ அந்த அலுவலர்கள் மற்றும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தரப்பில் அரசையும், உயர்நீதிமன்றத்தையும் நாட பொதுமக்கள் தயாராகி விட்டனர் என்பதை யாரும் மறந்துவிட கூடாது. சிலர் சுயநலத்துக்காக பலருக்கு இடையூறு விளைவிப்பது எவ்வகையில் நியாயம் ஆகும். 

ஆதலால் விரைவில் அந்த சூப்பு கடையை அப்புறப்படுத்த தொடர்புடைய அலுவலர்கள், காவல் துறை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதற்கு என்ன தீர்வு காணப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும். 

Label