OUR CLIENTS
எம்.எல்.ஏ. பாலன் செயல்பாடுகள் குறித்து புகார் ஆளுநர் கிரண் பேடி!
எம்.எல்.ஏ. பாலன் செயல்பாடுகள் குறித்து புகார் ஆளுநர் கிரண் பேடி! Posted on 03-Jul-2017 எம்.எல்.ஏ. பாலன் செயல்பாடுகள் குறித்து புகார் ஆளுநர் கிரண் பேடி!

புதுச்சேரி, ஜூலை 3-
உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலன் செயல்பாடுகள் குறித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

வாரந்தோறும் தூய்மைப் பணி, மழைநீர் சேகரிப்புப் பணிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிரண் பேடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.மேலும், கடந்த இரண்டு வாரங்களாக சனிக்கிழமைகளில் மாணவர்களுடன் துப்புரவுப் பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஆளுநர் மாளிகையில் இருந்து கிரண் பேடி தலைமையில் 200-க்கு மேற்பட்ட என்சிசி மாணவர்கள் சைக்கிளில் விழிப்புணர்வுப் பயணம் சென்றனர். இதன் தொடர்ச்சியாக உழவர்கரை தொகுதிக்கு உள்பட்ட பிச்சவீரன்பேட் பகுதியில் உள்ள காலி இடத்தில் மரங்களில் இருந்து விழும் தழைகள், கிளைகள், பூக்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்ற முயன்றனர்.

அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக அங்கிருந்த 20 அடி உயர பருத்தி மரத்தை அகற்ற இயந்திரங்கள் தேவை என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், மாணவர்கள் உதவியுடன் அந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது.

அப்போது அங்கு வந்த தொகுதி எம்.எல்.ஏ. பாலன் யாரைக் கேட்டு இங்கு வந்தீர்கள் எனக் கேட்டு, ஆளுநரை திருப்பி அனுப்பினார். அவரது செயல்பாடுகள் விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர், ஆளுநர் மாளிகையில் மாணவர்கள் மத்தியில் கிரண் பேடி பேசியதாவது:
ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம். சைக்கிளில் செல்வதை நாள்தோறும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 

இதுபோன்ற சைக்கிள் பயணம், மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக விளங்க உதவும். புதுச்சேரியைத் தூய்மையாக வைத்திருந்தால் பொதுமக்களுக்கும் சுகாதாரமான வாழ்வு கிடைக்கும் என்றார் அவர்.

களப் பணியின் போது, பஞ்சாப் ஏடிஜிபி விஜய் பிரதாப் சிங், ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி தேவனாஷ் யாதவ், தனிச் செயலர் ஸ்ரீதரன், சிறப்பு அதிகாரி அம்ருதா, கட்டுப்பாட்டாளர் ஆஷா குப்தா, மக்கள் தொடர்பு அதிகாரி குமரன் ஆகியோர் உடன் சென்றனர்.

Label