OUR CLIENTS
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பணம் பறிக்கும் அவலம் தொடருது!
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பணம் பறிக்கும் அவலம் தொடருது! Posted on 11-Jul-2017 கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில்  பணம் பறிக்கும் அவலம் தொடருது!

கிருஷ்ணகிரி, ஜூலை 11-
கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் எதற்கெடுத்தாலும் பணம் பறிக்கும் அவலம் தொடர்கதையாகி கொண்டே வருகிறது. இதை யார்தான் தடுத்து நிறுத்தவும், தவறு செய்பவர்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைநகராக இருந்து வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், அவர்களை பார்க்கச் செல்லும் பொதுமக்கள் நொந்துபோய் விடுகின்றனர். அரசு மருத்துவமனையில் பணியாற்றுவோர் நிதி நிறுவனத்தில் பணியாற்றுவது மாதிரி உள்ளனர்.

 இதுபோன்ற மனநிலையுடன் உள்ளவர்கள் நிதி நிறுவனத்துக்கே சென்று பணியாற்றலாமே என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு பொதுமக்கள் கூறுவதற்கு பின்னால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் தேவையில்லாத கேள்விகள், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை கூறி திட்டுவது மற்றும் மிகவும் அலட்சியத்தோடு கவனித்து வருகின்றனர். பணம் இல்லையென்றால் அணுவும் அசையாது. எதற்கெடுத்தாலும் பணம் கொடுத்தால்தால் வேலை நடக்கிறது. அட்மிஷன் செய்வதற்கு கூட ரூ.30 கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. 

இப்படி பணம் இல்லாமல் எந்த பணியும் நடப்பதில்லை இந்த கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் என்று சொன்னால் அது மிகையாகாது. கர்ப்பிணி தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றெடுத்துவிட்டால் போதும் அங்குள்ள செவிலியர்கள் புடைசூழ வந்து விடுகின்றனர். ரூ.500 கொடுத்தால் போதும் மெத்தை தருகின்றனர்.

 பணம் தரவில்லையென்றால் தரையில் கிடத்திவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரசவத்துக்கு வரும் பெண்களை இடுப்புவலி எடுத்தவுடன் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்று மிகவும் கிரிட்டிகலான சூழல் இருப்பதாக அந்த பெண்ணின் உறவினர்களிடம் கூறி அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்து விட்டு அதற்கும் தலா ரூ. 6 ஆயிரம் வரை கறந்து விடுகின்றனர். அத்துடன் விட்டுவிடாமல் சுகபிரசவம் ஆவதற்கு அனுமதிப்பதே இல்லை. 

அதற்கு தகுந்தார்போல முன்கூட்டியே ஊசிபோட்டு விடுகிறார்கள். அந்த ஊசியை போட்டுவிட்டாலே போதும் இடுப்பு வலி என்பதே கர்ப்பிணிகளுக்கு வராதாம். இப்படி பல முறைகேடுகளை கையாண்டு பணம் கறக்கப்படுகிறது.

 மனிதாபிமானமே இல்லாமல் இப்படி பணம் பறிக்கும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. ஏழை. எளிய மக்கள்தான் தனியார் மருத்துவமனைக்கு சென்று செலவு செய்ய இயலாது என்று இதுபோன்ற அர சு  மருத்துவமனையை நாடுகின்றனர்.   

பண வசதி இல்லாத காரணத்தால்தான் அரசு மருத்துவமனையை ஏழை, எளியோர் நாடுகின்றனர்.தனியார் மருத்துவமனையை காட்டிலும் அரசு மருத்துவமனையில்தான்   பணம், பணம் என்று பறித்து விடுகிறார்கள். பணம் தராதவர்களை தரக்குறைவான வார்த்தைகளை கூறி திட்டுகிறார்கள் என்ற புகார் தற்போது அதிகளவில் பொதுமக்களால் தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இதுபோன்ற சுடுசொற்களை கேட்கும் பொதுமக்கள்  மனம் மிகவும் பாதிக்கப்படுகிறது. பல நூதன  வசூல் வேட்டையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் இந்த கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை செவிலியர்கள்.  மாவட்ட நிர்வாகமாவது  இதுபோன்ற மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒரு சுற்றறிக்கையாவது விட்டு எச்சரிக்கை விட வேண்டும் என்பதே குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும்.  

செலவிலியர்களை காட்டிலும் மருத்துவர்கள் சிலரும் வசூல் வேட்டையில் மட்டுமே குறியாக உள்ளனர். இதனால் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வலம் வந்தால் பலர் அவர்கள் வலையில் சிக்குவார்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு. 

 ஏழை, எளியோரிடம் சுரண்ட நினைக்கும் இதுபோன்ற முதலைகளை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையில் பிடித்து தர தயங்க கூடாது பொதுமக்கள். நாட்டில் தற்போது அதிகளவில் பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளதால் இனி வரும் காலங்களில் யாரையும் ஏமாற்ற முடியாத நிலை ஏற்படும் என்று நம்புவோமாக.

Label