OUR CLIENTS
3 கிராம நிர்வாக அலுவலர்களுடன் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகம்: பணிகள் பாதிப்பு!
3 கிராம நிர்வாக அலுவலர்களுடன் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகம்: பணிகள் பாதிப்பு! Posted on 11-Jul-2017 3 கிராம நிர்வாக அலுவலர்களுடன் இயங்கும்  வட்டாட்சியர் அலுவலகம்: பணிகள் பாதிப்பு!

பூந்தமல்லி, ஜூலை 11-
மாதவரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் 3 கிராம நிர்வாக அலுவலர்களுடன் இயங்கி வருவதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உள்பட்ட மாதவரம், புழல், புழல் ஒன்றியம், செங்குன்றம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு அம்பத்தூர் செல்ல வேண்டிய நிலை இருந்தது. 

இதனால், கடந்த 2009- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாதவரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு உள்பட்ட புழல் ஒன்றியத்தில் தீர்த்தகரையாம்பட்டு, புள்ளிலைன், அழிஞ்சிவாக்கம், வடகரை, கிராண்ட்லைன், விளாங்காடுபாக்கம் ஆகிய கிராம ஊராட்சிகளும், செங்குன்றம் பேரூராட்சியும், மாதவரம் மண்டல அலுவலகத்துக்கு உள்பட்ட 12 வார்டுகளில் உள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். 

இவர்கள் வருவாய் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த அலுவலகத்தில் வட்டாட்சியர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும், பல்வேறு நிலைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

இப்பகுதிகளுக்கு 13 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் இருந்தனர். தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர். மற்ற அனைவரும் பணி ஓய்வு பெற்று விட்டனர். அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. 

மேலும் இந்த அலுவலகம் தனியார் மண்டபத்தில் இயங்கி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த நிலை உள்ளது. எனவே, வட்டாட்சியர் அலுவலகத்துக்கென அரசு சார்பில் சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்றும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label