OUR CLIENTS
3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பதவி பிரமாணம் செல்லாது சபாநாயகர் அறிவிப்பு
3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பதவி பிரமாணம் செல்லாது சபாநாயகர் அறிவிப்பு Posted on 11-Jul-2017 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பதவி பிரமாணம் செல்லாது சபாநாயகர் அறிவிப்பு

புதுச்சேரி, ஜூலை 11-
புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

புதுவையில் பா.ஜனதாவை சேர்ந்த 3 பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது.  பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

 ஆளும் அரசு சிபாரிசின் பேரில் தான் மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது வழக்கம். ஆனால் இப்போது மத்திய அரசே தன்னிச்சையாக 3 பேரை நியமித்ததால் அதற்கு புதுவை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இதை கண்டித்து முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களும் நடந்தன.

3 பேரும் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறையிடம் இருந்து கடந்த 3-ந்தேதி புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் வந்தது. 4-ந்தேதி அவர்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து தங்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கூறினார்கள்.  அதற்கு சபாநாயகர் இது சம்பந்தமாக மேலும் சில ஆவணங்கள் வேண்டும் என்று கேட்டார். இதனால் பதவி ஏற்பு காலதாமதமானது. அன்று இரவே கிரண்பேடி அவர்கள் 3 பேரையும் அலுவலகத்துக்கு அழைத்து அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறி இவ்வாறு அவர் செய்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன்பிறகு 3 பேரும் புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரை சந்தித்து நாங்கள் 3 பேரும் கவர்னர் மூலம் நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுள்ளோம். 

எங்களை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரித்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எங்களுக்கு அலுவலக அறையும் ஒதுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர்.  இந்த நிலையில் கவர்னரின் செயலாளர் தேவநீதிதாசிடம் இருந்து சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் மூலம் சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேருக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்டு அவர்களை எம்.எல்.ஏ.க்களாக பணியாற்ற அனுமதிக்கும்படி கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை வின்சென்ட் ராயர் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அவர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களை படித்து பார்த்தார்.  பின்னர் கவர்னரின் கடிதத்தை ஏற்க முடியாது என்று கூறி அதை திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்.  இந்த கடிதத்தை ஏன் ஏற்க முடியாது என்பது குறித்து அதில் குறிப்புகளையும், சபாநாயகர் எழுதி அனுப்பி இருக்கிறார்.

நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 3 பேரும் என்னிடம் மத்திய அரசு கடிதத்தை காண்பித்தார்கள். அதில் 3 பேர் பெயர் மட்டும் தான் இருந்தது. அவருடைய தந்தை பெயர் முகவரி போன்ற எந்த விவரங்களும் இல்லை. எனவே முழு தகவல்கள் அடங்கிய உத்தரவு இருந்தால் தான் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும் என்று கூறினேன்.  

மேலும் 3 பேர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு எதுவும் சபாநாயகர் அலுவலகத்துக்கு நியமிக்கும் அதிகாரம் உள்ள உரிய நபர்களிடம் இருந்து உத்தரவு வரவில்லை. எனவே நான் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை.  ஆனால் நீங்கள் (கவர்னர்) அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து இருக்கிறீர்கள்.

 சபாநாயகர் இருக்கும் போது, அவர்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரையும் மீறி கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது.
தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படும் நபருக்கு மட்டுமே எம்.எல்.ஏ. பதவி பிரமாணத்தை செய்து வைக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.  

மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தான் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.  எனவே நீங்கள் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது. நான் அவர்களை எம்.எல்.ஏ. வாக பணியாற்ற அனுமதிக்க முடியாது. இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்று சபாநாயகர் அறிவித்து இருப்பதால் 3 பேரும் எம்.எல்.ஏ.வாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சட்டசபைக்குள்ளும் வரமுடியாது.  

சட்டசபை வளாகம் முழுவதும் சபாநாயகரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சபாநாயகர் என்ன உத்தரவு விடுகிறாரோ அதை சட்டசபை காவலர்கள் நிறைவேற்றுவார்கள். இதனால் 3 பேரையும்  சட்டசபை வளாகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டால் அதை காவலர்கள் நிறைவேற்றுவார்கள்.  சபாநாயகரின் இந்த முடிவால் புதுவை நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.

Label