OUR CLIENTS
திருவெறும்பூர் அருகே இடிந்து விழும் அபாயத்தில் கிளியூர் பாலம்
திருவெறும்பூர் அருகே இடிந்து விழும் அபாயத்தில் கிளியூர் பாலம் Posted on 11-Jul-2017 திருவெறும்பூர் அருகே இடிந்து விழும்  அபாயத்தில் கிளியூர் பாலம்

திருச்சி, ஜூலை 11-
திருவெறும்பூர் அருகே கிளியூரில் பாலம் இடிந்து விழுந்ததால் மீதி பாலம் எப்போது விழுமென்று தெரியாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் கிராம பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளியூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி  மாணவ, மாணவிகள் இந்த கிராமத்திலிருந்து வயல் வெளிகளுக்கும், வெளியூருக்கும் செல்வதற்கு இந்த கல்லணை  கால்வாய் பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் ஆண்டு தோறும் ஜூன் மாதம் கல்லணையிலிருந்து  திறந்து விடப்படும் தண்ணீர் இந்த பாலத்தை கடந்தே தஞ்சை மாவட்டத்துக்கு செல்கிறது.

 கல்லணையிலிருந்து கல்லணை கால்வாய் ஆறு வெட்டப்பட்டப் போது கல்லணை கால்வாய் வாய்க்காலை கடப்பதற்காக கிளியூரில் 1928ல் பொதுப்பணித்துறையினரால் பாலம் கட்டப்பட்டது. 90 ஆண்டுகள் பழமையான இந்த  பாலத்தின் அஸ்திவார தூண் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது. இது குறித்து பொதுப் பணித்துறையினருக்கு கிளியூர் கிராம பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித் துறையினர் அப்போது தற்காலிகமாக அந்த உடைந்த பாலத்தின் தூணுக்கு ஆதரவாக தூண் கட்டி தற்காலிகமாக சரிசெய்தனர்.

இந்நிலையில் கிளியூர் பாலம் தொடர்ந்து நாளடைவில் பழுது ஏற்பட்டதுடன் அந்த பழுது அதிகரிக்க தொடங்கியது. இதனால் கிளியூர் பாலம் எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் கிராமமக்கள் சென்று வந்தனர். இதனால் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து விட்டு புதுபாலம் கட்டிதர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களுக்கு கிளியூர் மக்கள் கோரிக்கை மனுக்கள் பலமுறை அளித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட தோடு தங்களது பங்கிற்கு பாலம் வலுவிழந்துள்ளது, இதனால் கனரக வாகனங்கள் பாலத் தில் செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு போர்டுகளை பாலத்தின் இருபுறமும் வைத்து விட்டு சென்று விட்டனர்.  ஆனால் பாலம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.  

எம்பி, எம்எல்ஏக்களும்  கிளியூர் பாலத்தை வந்து பார்த்து சென்றதுடன் சரி. அவர்களும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த மே மாதம் பெய்த கனமழையில் கிளியூர் பாலத்தின் நடுவில்  2 அடிக்கு இடிந்து ஓட்டை விழுந்துள்ளது. ஓட்டை இருப்பது தெரியாமல் இருட்டில் வந்த பொது மக்கள் பலர் ஓட்டைக்குள் விழுந்து காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில் அந்த பாலத்தில் நடந்து செல்லுவதற்கு கூட பொதுமக்கள் பயந்து கொண்டே செல்கின்றனர். எப்போது பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் என்று தெரிய வில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அபாய பாலத்தை முற்றிலுமாக இடித்து விட்டு  புதியபாலம் கட்ட  அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கிளியூரை சேர்ந்த விவசாயி சங்கிலிமுத்து கூறுகையில், கிளியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்தப்பள்ளியில் 5வது வரை கிளியூர் கிராமத்திலும் 6 முதல் 8ம் வகுப்பு வரை கிளியூர் பாலத்தை தாண்டியும் உள்ளது. பாலம் இடிந்து விழுந்தால் அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு சுமார் 10 கி.மீ சுற்றி செல்ல வேண்டும். விவசாயத்திற்கும் அப்படிதான் இடு பொருட்களை கொண்டு வரவேண்டும் என்றார்.

பாலம் இடிந்து விழத் தொடங்கியுள்ளது.  இனி பொதுமக்களும் பள்ளி மற்றும் கல்லுரி செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த பாலத்தை கடந்து செல்வது கடினம். தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆற்றில் தண்ணீர் வந்தால் சிக்கல்தான்.

Label