OUR CLIENTS
வறட்சி நெருக்கடியில் வெண்பட்டு விவசாயிகள்
வறட்சி நெருக்கடியில் வெண்பட்டு விவசாயிகள் Posted on 11-Jul-2017 வறட்சி நெருக்கடியில் வெண்பட்டு விவசாயிகள்

உடுமலைப்பேட்டை, ஜூலை 11-
உடுமலை வட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் வெண்பட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

 இதனால், அந்த விவசாயிகள் மாற்றுத் தொழிலைத்  தேடி வரும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெண் பட்டுக் கூடு உற்பத்தியில் உடுமலை வட்டமே, இந்திய அளவில் முதலிடத்தை வகித்து வந்தது. இங்கு, சுமார் 1,500 விவசாயிகள் வெண்பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தினமும் சுமார் 1,500 கிலோ பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. 
ஆண்டு முழுவதும் பட்டுப் புழு வளர்ப்புக்கு ஏற்ற மிதமான தட்ப வெப்பம் நிலவிவந்ததால் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெண்பட்டுக் கூடுகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக உடுமலை வட்டத்தில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக பட்டுப் புழுக்களுக்கு உணவாகப் பயன்படும் மல்பெரி செடிகளின் சாகுபடி பரப்பளவு படிப்படியாகக் குறைந்துவிட்டது. இதனால், சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த மல்பெரி சாகுபடி, 500 ஏக்கர் அளவுக்கு சுருங்கிப் போனது. ஆனாலும், கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கியும், ஆழ்துளைக் கிணறுகள் மூலமாகவும் மல்பெரி செடிகளைக் காப்பாற்றி வந்தனர்.

இதற்கிடையில், வடகிழக்குப் பருவ மழையும், தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்துப்போன நிலையில் தற்போது விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், வெண்பட்டுத் தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாற்றுத் தொழிலைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தினமும் 1500 கிலோவாக இருந்த வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தி தற்போது 300 கிலோவாக குறைந்துபோனது.

 இதனால் பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்யப் பயன்படும் தளவாடப் பொருள் அனைத்தும் கிடங்குகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெண்பட்டுத் தொழில் விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதே வெண்பட்டு விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
இதுகுறித்து, வெண்பட்டு விவசாயிகள் சின்னவீரம்பட்டி தமிழ்வேந்தன், கண்ணமநாயக்கனூர் குப்புசாமி ஆகியோர் கூறியதாவது:

தற்போது வரலாறு காணாத விலையாக வெண்பட்டு கிலோ ரூ. 600-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் எங்களுக்கும் தொழிலைத் தொடர ஆசைதான். ஆனால், கடந்த ஒரு வருடமாகவே வறட்சியில் சிக்கி மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டு இறுதியில் தண்ணீரை விலைக்கு வாங்கி, மல்பெரி செடிகளைக் காப்பாற்றி வந்தோம். இந்நிலையில், இந்த ஆண்டு கடும் வறட்சியில் சிக்கியதால் மல்பெரி செடிகள் அனைத்தும் காய்ந்து விட்டன.

இதனால், எங்களது தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. தளவாடப் பொருள்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன. எனவே, வெண்பட்டுத் தொழிலைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

இது குறித்து மத்திய பட்டு வாரியம் மற்றும் ஆராய்ச்சி விரிவாக்க மைய அதிகாரிகள் கூறியதாவது:
மழை மறைவுப் பிரதேசமாகி விட்ட உடுமலை வட்டம், தற்போது கடுமையான வறட்சியில் சிக்கியுள்ளது. ஆகையால் மல்பெரி உற்பத்தி 75 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், வெண்பட்டு உற்பத்தி மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. 

வெண்பட்டுத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்க மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. மல்பெரி சாகுபடியைப் பெருக்க இலவசமாக மழைநீர் சேகரிப்புக் குட்டைகளை அமைத்துக் கொடுக்கவும் வறட்சியைத் தாங்கக் கூடிய வகையில் புதிய வகை மல்பெரி ரக செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு கொடுக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. 

பூச்சித் தாக்குதல், ரசாயன உரங்களில் இருந்து விடுபட்டு இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் போன்ற பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட வெண்பட்டு விவசாயிகள் குறித்து கணக்கெடுத்து 100 சதவீதம் மானியம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Label