OUR CLIENTS
2,000 ஆண்டுகளாக அழியாமல் உள்ள மண்டை ஓடு! பொக்கிஷமாக பாதுகாக்கிறது தொல்லியல் துறை
2,000 ஆண்டுகளாக அழியாமல் உள்ள மண்டை ஓடு! பொக்கிஷமாக பாதுகாக்கிறது தொல்லியல் துறை Posted on 11-Jul-2017 2,000 ஆண்டுகளாக  அழியாமல் உள்ள மண்டை ஓடு! பொக்கிஷமாக பாதுகாக்கிறது தொல்லியல் துறை

கோயம்புத்தூர், ஜூலை 11-
மனித உடல் மரணத்திற்கு பின், நிலம், நீர்,நெருப்பில் அழிந்து போய்விடும். இறப்பிற்கு பின் மனித உடலை அழியாமல் பாதுகாக்க ஆதிகால மக்கள் ஆர்வம் காட்டினர். 

இதற்காக தாழி, ஈம பேழைகள் உருவாக்கி வைத்திருந்தனர். இதிலும், 200 முதல் 300 ஆண்டு வரை மட்டுமே மனித எலும்புகளை பாதுகாக்க முடிந்தது. ஆனால், அரிதாக, அபூர்வமாக குகை பாறைகளில் சிக்கிய, இயற்கையின் ரசாயன மாற்றத்தால் பாதிக்கப்படாத சில மனித எலும்புகள் புதை உயிரி எலும்பு படிமங்களாக (பாசிலைஸ்டு போன் பிரக்மெண்ட்) கிடைத்துள்ளது. இந்த எலும்புகளை சுடுகாட்டு பொருளாக கருதாமல் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது கோவை தொல்லியல் துறை. 

ஆதிகால மனிதனின் அழியாத எலும்புகள் வரலாற்று சுவடுகளாக இருக்கிறது. 2 ஆயிரம் ஆண்டுக்கு முன் கோவை வட்டாரத்தில் குகை பாறைக்கு இடையே  ஈம பேழையில் வைக்கப்பட்டு இருந்த ஒரு மண்டை ஓடு தொல்லியல் துறையின் ஆராய்ச்சியில் இருக்கிறது. கண்ணாடி பெட்டகத்தில் வேதிப்பொருள் மூலமாக பராமரிக்கப்படும் இந்த மனித மண்டை ஓடு, கோவை நேரு ஸ்டேடியத்தில் உள்ள அகழ் வைப்பகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த மண்டை ஓடு 1.5 கிலோ எடைகொண்டது. தற்போதைய மனிதர்களின் மண்டை ஓட்டுடன் ஒப்பிடுகையில் ஆதிகால மனிதர்களின் மண்டை ஓடு 20 சதவீதம் வரை பெரிதாக உள்ளது. ஆயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மனித உடல் எலும்புகள் புதை உயிரி படிமங்களாக பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. 

அவிநாசி, மங்கலம் அருகேயுள்ள வண்ணாத்தங்கரை ஓடை, கோவை பேரூர் நொய்யல் ஆறு, சூலூர், இருகூர் பகுதியில் புதை படிமங்களாக எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. குத்து பாறைகளுக்கு இடையே பேழை, தாழியில் அடைக்கப்பட்ட உடல்களில் இருந்து சிதைந்தும், சிதையாமலும் படிவ எலும்புகள் பெறப்பட்டன. 

எலும்புகளின் கால்சியம் அளவு உறுதியாக இருந்ததால் இவை எளிதாக அழியாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. பாதுகாப்பாக வைத்தால் மேலும் பல நூறு ஆண்டுகள் வரை இந்த எலும்புகள் அழியாமல் வரலாற்று பொக்கிஷமாக இருக்கும்.   2 ஆயிரம் ஆண்டு கடந்த ஆதி கால மனிதர்களின் மண்டை ஓடு, எலும்புகள் பாதுகாக்கப்படுவது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

Label