OUR CLIENTS
புதுச்சேரியில் ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக!
புதுச்சேரியில் ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! Posted on 12-Jul-2017 புதுச்சேரியில் ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக!

புதுச்சேரி, ஜூலை 12-
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பாஜகவை சேர்ந்த மூன்று நபர்களை நியமன எம்எல்ஏக்களாக தன்னிச்சையாகவே பரிந்துரை செய்ய புதுச்சேரி அரசியலில் புயல் வீச ஆரம்பித்துள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கான சட்டம் 1963ம் ஆண்டுப்படி யூனியன் பிரதேச வரையறைக்குள் புதுச்சேரியும் கொண்டு வரப்பட்டது.

 அன்று முதல் அவ்வப்போது துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான அதிகார மோதல்கள் இன்று வரை தொடர்கிறது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு துணை நிலை ஆளுநராக முன்னாள் பெண் ஐபிஎஸ் அலுவலர் கிரண்பேடி நியமிக்கப்பட்டார்.

முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்கிறார். மேலும் முதல்வருக்கு எதிராக கிரண்பேடி போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். இதற்குமுன் இருந்த துணை நிலை ஆளுநர்கள் அப்படி நடந்து கொண்டது இல்லை. தினமும் ஒருவர் மீது மற்றவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். 

மக்கள் நலன் சார்ந்த கோப்புகளுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தரவில்லை என முதல்வர் நாராயணசாமி பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். புதுச்சேரி சட்டசபைக்கு பொதுத்தேர்தல் மூலம் 30 எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர், இதுதவிர 3 பேரை நியமன எம்எல்ஏக்களாகவும் நியமிக்க முடியும். 

இதற்கான பட்டியலை ஆளுநருக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும். அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு துணை நிலை ஆளுநர் அனுப்பி ஒப்புதல் பெறுவார். காலம் காலமாக இந்த நடைமுறையே மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் 1985ல் தான் முதன்முறையாக நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆகியும், நியமன எம்எல்ஏக்கள் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் மோதல் காரணமாக இந்த நிலை நீடித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூவரை நியமன எம்எல்ஏக்களாக பரிந்துரைக்க ஆளுங்கட்சி தயாராகி கொண்டிருந்தது. 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் புதுச்சேரி மாநில பாஜ தலைவர் சாமிநாதன், மாநில பாஜ பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகிய மூவரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. தலைமை செயலகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஜூலை 5ம் தேதி சபாநாயகர் வைத்திலிங்கம் பாஜ எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்து விட்டார். 

அன்று மாலையே ஆளுநர் கிரண்பேடி மூவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் கூறுகையில், கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதல்வராக இருந்தபோது தற்போதைய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் அமைச்சரவைக்கு அதிகாரமில்லை, ஆளுநருக்குதான் அதிகாரம் உள்ளது என்றார். 

தற்போது ஆளுநருக்குதான் அதிகாரம் உள்ளது. முதல்வருக்கு இல்லை என்பதை வெளிக்காட்டி வருகிறார். ரங்கசாமி முதல்வராக இருந்தபோது மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு ரங்கசாமி பரிந்துரை செய்த நியமன எம்எல்ஏக்கள் பட்டியலை நிராகரித்தது. இன்றும் அதேதான் நடைபெறுகிறது. நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்ததற்கு முக்கிய காரணம் முதல்வர் நாராயணசாமியின் பொறுப்பற்ற தன்மைதான். எனவே, காங்கிரஸ் அமைச்சரவையியை கலைக்க வேண்டும். முதல்வர் நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் நியமன எம்எல்ஏக்கள் விபரங்கள் அடங்கிய கடிதத்தை கடந்த ஜூலை 1ம் தேதி தலைமை செயலகத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருந்தது. அக்கடிதம் 3ம் தேதி கிடைத்தது. அந்த கடிதத்தில் நியமன எம்எல்ஏக்களின் தந்தை பெயர் மற்றும் முகவரி இல்லை. எனவே, அக்கடிதத்தை தலைமை செயலர், சபாநாயகருக்கு அனுப்பி பரிசீலிக்க கோரியிருந்தார். இதனிடையே மூவருக்கும் நியமன ஆணையை துணை நிலை ஆளுநர் வழங்கினார். 

அவர்கள் அதை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கொடுத்தபோது அரசிதழில் வெளிவந்தவுடன் பதவி ஏற்க அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அரசிதழில் வெளியானவுடன் துணை நிலை ஆளுநர் அவர்களை ரகசியமாக அழைத்து பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை கூட அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியமன எம்எல்ஏவாகி உள்ள சாமிநாதன் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர். 

மக்களால் புறக்கணிக்கப்பட்டவரை நியமன எம்எல்ஏவாக நியமித்து இருப்பது நியாயமல்ல. சாமிநாதன், செல்வகணபதி மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களை நியமன எம்எல்ஏவாக நியமிக்கலாமா?. நான் பலமுறை டெல்லி சென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, ஆளுநர் கிரண்பேடி விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் என புகார் கூறியிருதேன். தற்போது மத்திய அரசே விதிமுறைகளை மீறி செயல்படுகிறது என்றார். ஆக மொத்தத்தில் புதுச்சேரியிலும் பாஜக தனது ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கி விட்டது. இதனால் முதல்வர் நாராயணசாமி கடும் நெருக்கடியில் சிக்கி கொண்டுள்ளார்.

Label