OUR CLIENTS
மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்த திட்டம்... நிறைவேறுமா? கொள்ளிடத்தில் கதவணை கட்டுவது எப்போது?
மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்த திட்டம்... நிறைவேறுமா? கொள்ளிடத்தில் கதவணை கட்டுவது எப்போது? Posted on 12-Jul-2017 மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்த திட்டம்... நிறைவேறுமா? கொள்ளிடத்தில் கதவணை கட்டுவது எப்போது?

காட்டுமன்னார்கோவில், ஜூலை 12-
 முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ., அறிவித்த கொள்ளிடத்தில் கதவணை திட்டம் எப்போது நிறைவேறும் என இரு மாவட்ட விவசாயிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1836ம் ஆண்டு சர் ஆர்தர் கார்டன் என்பவரால் கட்டப்பட்டது கீழணை நீர் தேக்கம். 9 அடி உயரமுள்ள கீழணையில் 150.13 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்படுகிறது. கல்லணையிலிருந்து 67 மைல் கடந்து காவிரி நீர் வருகிறது. கொள்ளிடத்தில் வரும் அந்த தண்ணீரை தேக்க இதுவே கடைசி அணையாகும்.

இங்கு தேக்கப்படும் தண்ணீர் மூலம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. மழைக் காலங்களில் இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை தேக்கி சேமிக்கும் வகையில் கீழணைக்கு கிழக்கே கொள்ளிடம் ஆற்றில் மேலும் ஒரு கதவணை கட்ட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் நீண்ட நெடிய கோரிக்கையைத் தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மாவட்டம் மா.ஆதனூர் - நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே 400 கோடி ரூபாய் திட்டத்தில் கதவணை கட்டப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அறிவித்தார். அறிவித்து 4 ஆண்டுகள் கடந்தும், அதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. 

கதவணை கட்டும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அவ்வப்போது போராடி வருகின்றனர். ஆனாலும் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.

கீழணையிலிருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 2001ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை 640 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலுக்குச் சென்றுள்ளது. இப்படி வீணான தண்ணீரை சேமிக்கவே கல்லணைக்கு கிழக்கே கொள்ளிடம் ஆற்றில் 7 கதவணைகள் கட்ட வேண்டுமென விவசாய சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

கதவணையால் சாகுபடி பரப்பு அதிகரிப்பது மட்டுமின்றி கடலூர், நாகை மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்து குடி நீர் தட்டுப்பாடும் நீங்கும். தற்போது கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகுந்து குடிநீர் உப்பாக மாறி வருகிறது.

இதனால் கொள்ளிடக்கரையில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடி தண்ணீருக்கு மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்த வேளையில் கொள்ளிடத்தில் இரு குவாரிகள் செயல்படுவதால் மணலும் நாளுக்கு நாள் சுரண்டப்படுகிறது.

இதனால் மிப்பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கடலூர், நாகை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையே பூர்த்தி செய்யும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டங்கள், கொள்ளிடத்தில் இருந்து ஆழ்துளை மோட்டார் மூலம் குடிநீர் கொண்டு சென்று மக்களுக்கு வழங்கும் 3 திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

எனவே, எதிர்கால நலன் கருதியும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீர் ஆதாரங்களை கருத்தில் கொண்டும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை திட்டத்தை விரைந்து துவங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Label