OUR CLIENTS
காட்பாடி டெல் வெடிமருந்து தொழில் நிறுவனத்தில் ஊழியர்கள் ஊதியமின்றி ஊசலாடும் பரிதாபம்!
காட்பாடி டெல் வெடிமருந்து தொழில் நிறுவனத்தில் ஊழியர்கள் ஊதியமின்றி ஊசலாடும் பரிதாபம்! Posted on 13-Jul-2017 காட்பாடி டெல் வெடிமருந்து தொழில் நிறுவனத்தில் ஊழியர்கள் ஊதியமின்றி ஊசலாடும் பரிதாபம்!

வேலூர், ஜூலை 13-
என்று தணியும் சுதந்தர தாகம் என்பது போல டெல் வெடிமருந்து தொழிலாளர்களின் ஊதிய பாக்கி என்றுதான் முடிவுக்கு வரும் என்பது பல்வேறு சந்தேகங்களையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. பல கட்ட போராட்டங்களை நடத்திப் பார்த்து ஓய்ந்து விட்டனர் டெல் தொழிலாளர்கள். 

வேலூர் மாவட்டம், காட்பாடியில் கிறிஸ்தியான்பேட்டையில் மலையில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனால் திறக்கப்பட்டதுதான் இந்த டெல் தொழிற்சாலை. இந்நிலையில் டெல் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கடந்த செவ்வாய்க்கிழமை (11ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 இதில் நிலுவையில் உள்ள மாத ஊதியம், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, கூட்டுறவு கடனுக்கான தீர்வு? மாற்றுப்பணி கேட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய பணி இடமாற்றம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள் ஆறுமாதமாக பல்வேறு பொருளாரதார நெருக்கடிகளில் நாங்கள் உள்ளோம். 

நிர்வாக கோளாறினால் எங்களை போன்ற ஊழியர்களின் வாழ்வாதாரத்தை வஞ்சித்துகொண்டு இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது எனவும் புலம்புகிறார்கள். வீட்டுவாடகை கொடுக்கவில்லை, பிள்ளைகளின் கல்வி, வீட்டுக்கு மளிகை பாக்கி, பால் பாக்கி, உறவினர்களின் விசேஷங்கள் என பலதரப்பட்ட பிரச்னைகள் உள்ளன. 

தினமும் வேலைக்கு செல்வதற்கு ஒன்றும் குறைவில்லை. சம்பளம்தான் வந்தபாடில்லை. ஏன் குடும்பதலைவர் என்று பொறுப்பு வைத்து கொண்டு திரிகின்றீர்கள் என்று மனைவிமார்கள் புலம்புகின்றனர்.  டெல் நிறுவனத்தின் பெயரைச் சொன்னால் கடன் தருபவர்கள் கூட தர மறுக்கிறார்கள். 

இதற்கு நிரந்தர தீர்வுதான்  எப்போது? என்பதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வியாக  உள்ளது. வறுமையில் வாடும் இவர்களுக்கு உயிர் தண்ணீர் விடுபவர்கள் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label