OUR CLIENTS
போலி பாஸ்போர்ட் தில்லுமுல்லு சென்னை போலீஸ்காரர் கைது!
போலி பாஸ்போர்ட் தில்லுமுல்லு சென்னை போலீஸ்காரர் கைது! Posted on 13-Jul-2017 போலி பாஸ்போர்ட் தில்லுமுல்லு சென்னை போலீஸ்காரர் கைது!

சென்னை, ஜூலை 13-
போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலுடன் சேர்ந்து, சந்தேக நபர்களை வெளிநாடுகளுக்கு தப்ப வைத்து, பல லட்சம் ரூபாய் வசூலித்த, நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, திருவல்லிக்கேணி, பள்ளப்பன் தெருவைச் சேர்ந்தவன் ராமலிங்கம், 54. போலி பாஸ்போர்ட் கும்பல் தலைவனான இவன் ஜூன், 9ல், கே.கே.நகர் போலீசாரிடம் சிக்கினான். 
அவனது வீட்டில் நடத்திய சோதனையில், முகமது சுதிர், சவுக்கத் அலி, தாஜிதீன், ரகுவரன், மகேந்திரன் என்ற பெயர்களில் வாங்கப்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள், வாக்காளர் அடையாள அட்டை,’பான்’ கார்டுகள் சிக்கின. 

விசாரணையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் முருகன், 49, போலி பாஸ்போர்ட் தயாரிப்புக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. உடன், நுண்ணறிவு பிரிவில் இருந்து, முருகன் விடுவிக்கப்பட்டார். அவரது நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டன. மேலும், ‘பாஸ்போர்ட் வழங்கலாம்‘ என, முருகன் பரிந்துரை செய்த ஆவணங்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது, இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள், போலி பாஸ்போர்ட்டில், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகன் கைது செய்யப்பட்டார்.

போலீசாரிடம், அவர் அளித்துள்ள வாக்குமூலம்: நான், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவன். காவல் துறையில், 1994ல், இரண்டாம் நிலை காவலராக சேர்ந்தேன். சென்னை, புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில், குடும்பத்துடன் வசித்து வந்தேன். 

சிந்தாதிரிப்பேட்டையில், டிராவல்ஸ் நடத்தி வந்த ராமலிங்கம் அறிமுகமானான். எனக்கு வெளிநாட்டு மது வகைகள் வாங்கி கொடுப்பான். இதனால், அவனுடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அவன் சந்தேக நபர்களை அழைத்து வந்து, ‘இவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. 

உடனடியாக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும்; அதற்கு பாஸ்போர்ட் வேண்டும்‘ என்பான். அதற்கு ஏற்ப, அவனது வீடு சிந்தாதிரிப்பேட்டையில் இருப்பதுபோல் போலியாக முகவரியை குறிப்பிட்டு, போலி வாக்காளர் அடையாள அட்டை, ‘பான்’ கார்டு தயாரித்து, பாஸ் போர்ட்டுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பான். அந்த விண்ணப்பம், என்னிடம் ஆய்வுக்கு வரும். நான் அந்த நபர்களின் வீட்டிற்கு சென்று விசாரித்தது போல, கமிஷனர் அலுவலக பாஸ்போர்ட் பிரிவுக்கு போலியாக அறிக்கை அனுப்புவேன்.

இதற்கு, ராமலிங்கத்திடம், ஒரு பாஸ்போர்ட்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் என, பல லட்சம் ரூபாய் வாங்கினேன். அவன் என்னை காட்டிக் கொடுத்ததால், மாட்டிக் கொண்டேன். இவ்வாறு அவர்கூறியுள்ளார். இந்நிலையில், கைதான முருகன், காவல் துறை பணியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

Label