OUR CLIENTS
கலாம் சாட் பெயரில் மிகச் சிறிய செயற்கை கோள் மாணவர்கள் சாதனைக்கு ரூ.10 லட்சம் ஊக்கப்பரிசு
கலாம் சாட் பெயரில் மிகச் சிறிய செயற்கை கோள் மாணவர்கள் சாதனைக்கு ரூ.10 லட்சம் ஊக்கப்பரிசு Posted on 13-Jul-2017 கலாம் சாட் பெயரில் மிகச் சிறிய செயற்கை கோள்  மாணவர்கள் சாதனைக்கு ரூ.10 லட்சம் ஊக்கப்பரிசு

சென்னை, ஜூலை 13- 
கலாம் சாட் என்ற பெயரில் மிகச் சிறிய செயற்கைக் கோளை உருவாக்கிய கரூர் மாவட்ட மாணவர்களுக்கு முதல்வர் எடப்பாடி 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர்  ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய போட்டியில் கலந்து கொண்டு,  உலகத்தின் 57 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 80,000 மாதிரிகளில் முதல் பரிசு பெற்றது. 

இந்த செயற்கைக்கோள் கடந்த  22.6.2017 அன்று விண்ணில் "கலாம் சாட்" என்ற பெயரில் "நாசா" ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.  முப்பரிமாண அச்சுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது. 

இந்த சாதனையை படைத்து, இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்த மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர்கள் - யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத் மற்றும் முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கு மேலும் இதுபோன்ற பல சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் 24.6.2017 அன்று அறிவித்தார்கள்.
 
அதன்படி, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்   நேற்று  (12.7.2017) தலைமைச் செயலகத்தில், இச்சாதனை படைத்த ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஊக்கத்தொகையாக வழங்கி, அம்மாணவர்களை பாராட்டினார்கள். 

இந்த நிகழ்வின்போது,   உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்  சுனீல் பாலீவால்,  தொழில்நுட்ப கல்வி ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு)  இராஜேந்திர ரத்னூ,  அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் எஸ். கணேசன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மிஷன் டைரக்டர் டாக்டர் ஸ்ரீமதி கேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Label