OUR CLIENTS
ஜிஎஸ்டியால் மேலும் நலிவடையும் கைத்தறி தொழில்!
ஜிஎஸ்டியால் மேலும் நலிவடையும் கைத்தறி தொழில்! Posted on 13-Jul-2017 ஜிஎஸ்டியால் மேலும் நலிவடையும் கைத்தறி தொழில்!

பூந்தமல்லி, ஜூலை 13-
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கைத்தறி, விசைத்தறி மூலம் துணி நெய்யும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியால் இந்தத் தொழில் மேலும் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மாதர்பாக்கம், மாநெல்லூர், பாதிரிவேடு, நேமலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குலத்தொழிலான கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் துணி நெய்தல் பணி செய்து வருகின்றனர்.

இவர்கள் துணி நெய்வதற்கான பலவண்ண நூல்களை ஒரு கிலோ ரூ.225 முதல் ரூ.235 வரை  விலை கொடுத்து சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வாங்கி வருகின்றனர். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியால், இந்த பலவண்ண துணி நூல்களின் விலை கிலோ ரூ.50க்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது என நெசவாளர்கள் வேதனைப்படுகின்றனர்.

மாநெல்லூர் கிராமத்தில் கைத்தறி துணி நெய்தலை மேற்கொண்டு வரும் 71 வயதான சுப்பிரமணி, தனது 10வது வயது முதல் இந்த தொழிலை செய்து வருகிறார். அவரால் ஒரு நாளைக்கு 2 புடவைகள் மட்டுமே நெய்ய முடிகிறது. இதன்மூலம் அவரால் மாதம் ரூ. 1,500 மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. 

இதேபோல் கைத்தறி நெசவை மேற்கொண்டுவரும் பலர் குறைந்த வருவாயைத்தான் ஈட்டுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அவர்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கைத்தறி நெசவை மேற்கொள்ளும் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு கைத்தறி மூலம் போதிய வருவாய் கிடைப்பதில்லை. இதனால் எங்களுக்கு 80 சதவிகித மானிய விலையில் விசைத்தறி வாங்கவும்,  அரசின் பசுமை வீடுகளை மானிய விலையில் கடனாக வழங்கவும் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் விவாதம் நடத்தி, உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

இதேபோல், மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதைப் போல், மழைக் காலங்களான 3 மாதங்களில் எங்களுக்கும் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேலும் கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு பயன்படும் துணி நூல்களின் விலையை அதிகரிக்கக்கூடாது. அப்போதுதான் எங்களது வாழ்வாதாரம் மேலும் நசிந்து போகாமல், எங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்’ என்றனர்.

Label