OUR CLIENTS
குளறுபடிகளுடன் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4.5 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்!
குளறுபடிகளுடன் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4.5 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்! Posted on 13-Jul-2017 குளறுபடிகளுடன் வேலூருக்கு அனுப்பி  வைக்கப்பட்ட 4.5 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்!

வேலூர், ஜூலை 13-
 அதிக குளறுபடிகளுடன் வேலூருக்கு வந்த 4.5 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுவினியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஸ்மார்ட் கார்டுகளில் குளறுபடிகள் உள்ளதால், மீண்டும் குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் எண், புகைப்படம் மற்றும் செல்போன் எண்களை சேகரித்து வருகின்றனர். 

இதுதவிர இ சேவை மையங்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டையும் பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 928 முழுநேரக் கடைகளும், 896 பகுதிநேர கடைகளும் உள்ளன. இதில் 13 கடைகள் மகளிர் சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் முழுநேரக் கடைகளாகும். மாவட்டத்தில் 10 லட்சத்து 574 ரேஷன் கார்டுகள் இருந்தன. இதில் 1 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டன.

தற்போது 9 லட்சத்து 574 ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இந்த கார்டுகளில் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை பாயின்ட் ஆப் சேல் கருவியில் இணைத்து சென்னையில் பொது வினியோகத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 375 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்துள்ளன.

 இந்த கார்டுகளை 3 லட்சத்து 12 ஆயிரத்து 497 பேர் பெற்றுள்ளனர். ஆனால் 6 லட்சம் பேருக்கு இன்னும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரவில்லை. இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து 4.5 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வேலூருக்கு வந்தன. 

ஆனால் இந்த கார்டுகளில் பெயர், முகவரி திருத்தங்கள் மற்றும் புகைப்படம் மாற்றம் என பல்வேறு குளறுபடிகள் அதிகளவில் உள்ளன என்பது தெரிய வந்தது. எனவே 4.5 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளும் மீண்டும் ஐதராபாத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுவினியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Label