OUR CLIENTS
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தெப்பத்திருவிழா
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தெப்பத்திருவிழா Posted on 13-Jul-2017 வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தெப்பத்திருவிழா

திருநெல்வேலி, ஜூலை 13-
 வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழாவையொட்டி தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும் வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமி அம்மையப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடந்தது. விழா நாட்களில் சுவாமி, அம்மையப்பனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் வீதி உலாவும், பக்தி சொற்பொழிவுகளும் நடந்தது.

9ம் நாளான 8ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று முன்தினம் சப்தவர்ணம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணிக்கு தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் திருவீதியுலா நடந்தது. இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தார். 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி அம்மையப்பன் நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்தார். 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் சிவகிரி நீதிபதி நிலவேஸ்வரன், வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் குரூப் ஆப் கல்லூரி தாளாளர் முருகேசன், நகர பஞ்சாயத்து செயல்அலுவலர் லெனின், நாடார் உறவின் முறை தலைவர் தவமணி, அதிமுக நகரச்செயலாளர் வக்கீல் குமரேசன், பள்ளி கமிட்டி செயலாளர் சுமங்கலி சமுத்திரவேலு, இல்லத்து பிள்ளைமார் சமுதாயத் தலைவர் பொன்மாரியப்பன், மற்றும் சுமங்கலி சமுத்திரம், அனைத்து சமுதாய மண்டகபடிதாரர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

Label