OUR CLIENTS
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சாலை விபத்தில் 410 பேர் பலி!
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சாலை விபத்தில் 410 பேர் பலி! Posted on 13-Jul-2017 அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சாலை விபத்தில் 410 பேர் பலி!

அம்பத்தூர், ஜூலை 13- 
 அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சாலை விபத்துக்களில் 410 பேர் பலியாகி உள்ளனர். 

மேலும் விபத்துகளில் 1,563 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். விபத்தை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்த பொதுமக்கள்வலியுறுத்தி உள்ளனர்.அம்பத்தூர் காவல்மாவட்டத்தில் அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், முத்தா புதுப்பேட்டை, மாங்காடு, குன்றத்தூர், நசரத்பேட்டை, பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங்கள் உள்ளன.இந்த காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இரவில் மின் விளக்குகள் சரிவர எரிவது கிடையாது. மேலும், சாலை ஆக்கிரமிக்கப்பட்டு குறுகிப்போய் உள்ளதால் அடிக்கடி விபத்து  ஏற்படுகின்றன. இதில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிரிழக்கின்றனர். 

இந்த சாலைகளில் கடந்த 2015ம் ஆண்டு மட்டும் நடந்துள்ள விபத்துக்களில் 256 பேர் உயிரிழந்து உள்ளனர். 1100 பேர் கை, கால்கள் உடைந்து படுகாயம் அடைந்துள்ளனர். பைக், கார்கள் உள்பட 1172 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த விபத்துகளில் 280 பேர் உயிர் இழந்துள்ளனர். 1083 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை ஆறு மாதங்களில் நடந்த விபத்துகளில் 130 பேர் உயிர் பலியாகி உள்ளனர். 480 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களில் செல்வது, சிக்னலை மதிக்காமலும், அதிக வேகமாகவும், அஜாக்கிரதையாக செல்வதும்தான் விபத்து அதிகரிக்க காரணமாக உள்ளது.மேலும், கவனக்குறைவாக சாலையை கடப்பது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, குண்டும் குழியுமான சாலை, மின் விளக்குகள் எரியாததாலும் விபத்துகள் ஏற்படுகிறது. 

மேலும், சாலையோரம் உள்ள மணல் திட்டுக்களாலும், சாலையின்  நடுவே நாய்கள், மாடுகள் சுற்றி திரிவதாலும் பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்’’ என்றார்.

இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், ‘‘விபத்துக்களை தடுக்க சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைப்பது, சாலையின் மைய தடுப்புகளிலுள்ள மின் விளக்குகளை எரிய செய்வது 
போன்ற பணிகளில் அதிகளவில் அக்கறை காட்டினால்தான் விபத்துக்களை குறைக்கலாம். மற்றும் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் விழிப்புணர்வு  கூட்டங்களை நடத்த வேண்டும்’’ என்றனர்.

Label