OUR CLIENTS
தமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை!
தமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை! Posted on 14-Jul-2017 தமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க  தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை!

சென்னை, ஜூலை 14-
தமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்த செய்தியாளர்களும் இன்று தமிழக சட்டசபையில் நடைபெற உள்ள செய்தித்துறை தொடர்பான மானிய கோரிக்கையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஆதலால் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க அறிவிப்பு வெளியிடச் செய்து உதவுமாறு ஜியிஹி சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில பொதுச்செயலாளரும், 'காலச்சக்கரம் நாளிதழ்' நிறுவனருமான கா.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 
தமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எங்கள் கோரிக்கையை சமர்ப்பித்து வந்தோம். நாங்கள் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் டியூஜே தலைமையில் பல ஆண்டுகாக செயல்பட்டு வந்தோம். 

எங்களின் மதிப்பிற்குரிய தலைவர் ரவீந்திரதாஸ் மறைவுக்கு பின்னர் நேர்மையான, உண்மையான பத்திரிகையாளர்கள் ஒன்று கூடி தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் என்ற அமைப்பில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். எங்கள் மாநில தலைவர் கே.காளிதாசன் தலைமையில் சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

சங்கம் தொடங்கிய நாளிலிருந்தே, சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தமிழக முதல்வரையும், அரசின் செயல்பாடுகளையும் போற்றிடும் வகையிலும், புகழ்ந்திடும் வகையிலும் செயல்பட்டு வருகிறோம்.  

கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே ஆர்ப்பாட்டங்களையும், உண்ணாவிரதங்களையும் நடத்தியிருக்கிறோம். உதாரணத்துக்கு கடந்த 16.11.2013ல் தமிழக அரசின் தீர்மானத்தை உதாசீனம் செய்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் எங்கள் சங்கத்தின் சார்பில் நடத்தினோம். இதேபோன்று கடந்த 28.06.2014ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், கச்சத்தீவை மீட்கக் கோரியும், பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்திட கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 

06.08.2014ல் தமிழக முதல்வரை இழிவுபடுத்திடும் வகையில் வலைதளத்தில் கட்டுரை வெளியிட்டதை கண்டித்து இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்ட் நடத்தினோம். இதைத்தொடர்ந்து கடந்த 04.10.2014ல் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களை விடுதலை செய்யக் கோரி சென்னை பாரிமுனையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதுமட்டுமல்ல இதுபோன்று அண்மையில் விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு தொடர்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

 மக்களுக்காகவும், அரசுக்காகவும் எங்கள் சங்கம் என்றும் விசுவாசமாகவும்., உண்மையாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தமிழகத்தில் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஒன்று மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் என்றென்றும் தமிழக அரசின் செய்தியாளராகவே இருந்து வருகிறது என்று கூறு வதிலும் பெருமைப் படுகிறது. இத்தகைய சீரிய எண்ணங் களுடன் செயல்படும் பத்திரிகையாளர் நலன்களை காத்திடும் வகையில் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசின் முன்பாக சமர்ப்பித் துள்ளோம். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எங்கள் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து தக்க உத்தரவினை பிறப்பித்திட வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன். அண்டை மாநிலமான ஆந்திராவில் பத்திரிகை யாளர்களுக்கு நலவாரியம் அமைத்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பேருதவி புரிந்துள்ளார். 

இதனால் பத்திரிகையாளர்களின் குழந்தைகள் பலன் அடைகிறார்கள். அதேபோன்று தமிழகத்தில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைந்தால் பத்திரிகையாளர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். குறிப்பாக இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிகை துறையினர் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும். 

பாதுகாப்பும் பலப்படுத்தப்படும் என்பது உறுதியாகிறது. ஆதலால் தமிழக அரசும், முதல்வரும், பத்திரிகையாளர் நல வாரியத்தை கருணை உள்ளத்தோடு வழங்கி ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Label