OUR CLIENTS
ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு 21 தியாகிகளுக்கு மெஹ்பூபா அஞ்சலி
ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு 21 தியாகிகளுக்கு மெஹ்பூபா அஞ்சலி Posted on 14-Jul-2017 ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு 21 தியாகிகளுக்கு மெஹ்பூபா அஞ்சலி

ஸ்ரீநகர், ஜூலை 14- 
ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

1931ம் வருடம் தோக்ரா ராணுவத்தால் சுட்டுகொல்லப்பட்ட 21 பேரின் நினைவுநாளை முன்னிட்டு பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

எனவே பாதுகாப்பு கருதி ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள 7 காவல்நிலையம் அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் நடமாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் நகரம் உட்பட அனந்த்நாக், புல்வாமா, குல்காம் மாவட்டம் ஆகிய இடங்களில் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள சோபோர் மற்றும் ஹாந்வாரா நகரங்களில் மக்கள் பொதுக்கூட்டம் போட்டு பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் மொபைல், இண்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல் மட்டும் இயங்குவதாக கூறப் பட்டுள்ளது.நேற்று காஷ்மீரில் விடுமுறையாதலால் அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் இயங்கவில்லை. பள்ளி கல்லூரிகளும் கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டுள்ளன. 

பயத்தை எதிர்த்து போராடுங்கள் & முதல்வர் மெஹ்பூபா முப்தி அறிவுரை :

ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா இன்று தோக்ரா ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 பேரின் கல்லறைகளில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய மெஹ்பூபா  ‘‘இன்று ஜம்மு காஷ்மீர் ஒருசிலரின் பிணைக்கைதியாக உள்ளது. 

எந்த மாநிலத்தின் நலனுக்காக இந்த 21 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்தார்களோ அந்த ஜம்மு காஷ்மீரை வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்ற மக்கள் தங்கள் பயத்தை எதிர்த்து போராட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

மேலும் காஷ்மீரிய கொள்கையை பாதுகாக்க, ஜனநாயகம் கொண்ட வளர்ச்சி மிகுந்த மாநிலமாக ஜம்மு காஷ்மீரை நிர்மாணிக்க உயிர்த் தியாகம் செய்த வீரர்களை மக்கள் என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  
அமர்நாத் தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் கண்டன குரல் எழுப்பியதை சுட்டிக்காட்டிய முதல்வர், இந்த செயல் மூலம் காஷ்மீரியம் உயிருடன் இருப்பதை மக்கள் உலகத்திற்கு நிரூபித்துள்ளனர். அதற்கு எதிராக திரளும் எந்த சக்தியையும் காஷ்மீர் மக்கள் ஏற்கமாட்டார்கள் என மெஹ்பூபா முப்தி கூறினார். 

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முதல்வருடன் அவரது கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லை.

Label