OUR CLIENTS
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு!
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு! Posted on 19-Jul-2017 விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில்  மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு!

விழுப்புரம், ஜூலை 19-
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது.

 தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் அங்கயற்கண்ணி. அவரது மாமாதான் சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ உதயசூரியன். இவர்தான் ஆக்டிங் மாவட்டச் செயலாளர் ஆவார். இந்த தரப்புக்கும், ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கும் இடையேதான் பதவிப் போர் நடந்து வருகிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

திமுகவில் மாவட்டம் பிரிந்தபோது மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு கடுமையாக மோதியவர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், முன்னாள் எம்பி ஆதிசங்கர். ஆனால் முன்னாள் எம்எல்ஏ அங்கயற்கண்ணிக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கியது திமுக தலைமை. ஆனால் ஆரம்பத்தில் அங்கயற்கண்ணியை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் அவர் படத்தையும், பெயரையும் தவிர்த்து வந்தார்கள் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் நாளடைவில் மாவட்ட செயலாளர் அங்கயற்கண்ணியை முன்னிலைப் படுத்தினார்கள்.

கடந்த சட்டசபை தேர்தலில் சம்பந்தமே இல்லாமல் ரிஷிவந்தியம் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயன், எ.வ.வேலு மூலமாக சீட்டு பெற்று நின்று, தொகுதியில் வெற்றியும் பெற்றார். அவ்வப்போது வேலுவை சந்தித்து ஆலோசனை பெறுவதும், அவரை வைத்து கூட்டம் போடுவதும் என முழுமையாக வேலுவின் ஆதரவாளராகவே தோற்றமளித்தார் வசந்தம் கார்த்திகேயன். 

தொகுதியில் இவருக்கு எதிராக இருந்த முன்னாள் எம்.பி., ஆதிசங்கர் தேர்தல் வேலை செய்யவில்லை என புகாரை கொடுத்து அவரை கட்சியில் இருந்து ஃபீல்டு அவுட்டாக்கி விட்டார் வசந்தம் கார்த்திகேயன். தொகுதியில் தனது செல்வாக்கை உயர்த்தியது மட்டும் அல்லாமல் மாவட்ட செயலாளர் ஆக வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதற்கு ஒன்றிய செயலாளர்கள் சிலரை தனது கைவசம் வைத்துக் கொண்டு அவர்களுக்கு பணத்தை வாரி இறைக்கிறார். 

அதேபோன்று தியாகதுருகம் தரணி சர்க்கரை ஆலையில் மூக்கை நுழைத்து பிரச்னை உண்டு பண்ணினாராம் வசந்தம் கார்த்திகேயன். ஆலை உரிமையாளர் நேராக ஸ்டாலினிடம் பிரச்னையை சொல்லி விட்டாராம். இதனால் வசந்தம் கார்த்திகேயனுக்கு இமேஜ் குறைந்தது. இதையெல்லாம் சேர்த்து வைத்து ஸ்டாலின் எ.வ.வேலுவை கூப்பிட்டு நீங்கதானே ரெகமண்ட் பண்ணி, சீட்டு வாங்கி கொடுத்தீங்க, வசந்தம் கார்த்திகேயன் இப்படி நடந்துக்கலாமா? என்று எ.வ.வேலுவிடம் டோஸ்விட அதிலிருந்து வசந்தம் கார்த்திகேயன் எ.வ.வேலு இருவருக்கும் விரிசல் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் இது நாடகம் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதும் எ.வ.வேலுவை முன்னிலை படுத்தும் வசந்தம் கார்த்திகேயன், அதற்கு மாறாக சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை வைத்து தியாகதுருகத்தில் கலைஞர் கருணாநிதியின் 94&வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை வைரவிழா பொதுக்கூட்டத்தை கூட்டி, தனது பலத்தை காண்பித்து மாவட்ட செயலாளர் பதவிக்கு அச்சாரம் போட்டார். இவருக்கு போட்டியாக சங்கராபுரத்தில் எ.வ.வேலுவை வைத்து போட்டி கூட்டம் நடத்தினர் அங்கயற்கண்ணியும், உதயசூரியனும். அதிலும் எ.வ.வேலு வருகையின்போது வசந்தம் கார்த்திகேயன் தனியாக வரவேற்பு கொடுத்து அசத்தினர்.

அவருடன் ஒன்றிய பொறுப்பில் உள்ள முக்கால்வாசி ஒன்றிய, நகர செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயனுடன் வரவேற்பில் கலந்து கொண்டனர். இந்த பணிப்போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் மாவட்ட செயலாளர் பதவியை வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏவுக்கு கிடைக்கும் என்றும், அதற்கு எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரின் ஆசியும் இருக்கும் என்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இருந்தாலும் தளபதி ஸ்டாலின் குட்புக்கில் இடம்பெற்றிருக்கிறார் வசந்தம் கார்த்திகேயன் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் ஒன்றிய, நகர செயலாளர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இவருக்குதான் ஆதரவு தருகிறார்கள். மகளிருக்கு ஒதுக்கியதால் அங்கயற்கண்ணியிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவியை எடுக்க திமுக தலைமை யோசிக்கிறது. பொது என்று ஒதுக்கியிருந்தால் என்றைக்கோ இவரை மாவட்ட செயலாளர் பதவி தேடி வந்திருக்கும். எனினும் கூடிய விரைவில் மாவட்ட செயலாளர் பதவியை வசந்தம் கார்த்திகேயன் கைப்பற்றுவார் என்று ஆதரவாளர்கள் அடித்து கூறுகிறார்கள்.

இதுஒருபுறம் இருந்தாலும், இளம்வயதிலேயே எம்எல்ஏ ஆனவர் உதயசூரியன். மாவட்ட செயலாளர் பதவியும் வகித்தவர். மக்களிடையே எளிமையாக பழகக் கூடியவர். திமுக தலைமையுடன் நன்கு பரிட்சயம் ஆனவர். திமுகவை பொறுத்தவரைக்கும் என்றைக்கும் ஷோ அரசியல் எடுபடாது. 

மாவட்ட செயலாளர் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை, அப்படியே மாற்றினாலும் உதயசூரியனுக்குதான்  மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும். அவர்தான் அதற்கு தகுதியானவர் என்று உதயசூரியன் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எதுஎப்படியோ  விரைவில் விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் திமுகவில் நிகழும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும். 

Label