OUR CLIENTS
திருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்!
திருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்! Posted on 19-Jul-2017 திருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்!

திருச்சி, ஜூலை 19-
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிக மணல் குவாரிகள் இயங்குவது திருச்சி மாவட்டத்தில்தான். காரணம் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டு ஆறுகளும் இந்த மாவட்டத்தில்தான் பரந்து விரிந்து பாய்கின்றன. 

ஒரு பக்கம் ஏதாவது ஒரு கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் இந்த ஆறுகளில் உள்ள நீர் ஆதாரங்களை அரசே அழித்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மற்றொருபுறம் மணல் இதுவும் இப்போது அரசு கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டாலும்  அனைத்து குவாரிகளும் ஆளும் கட்சியினர் பிடியில்தான் உள்ளதாம்.

பெருகமணி குவாரி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், திருவளர்சோலை குவாரி அமைச்சர் வளர்மதிக்கும், திருவாசி குவாரி மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனுக்கும், முசிறி குவாரி எம்எல்ஏ செல்வராஜிக்கும், மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகருக்கு அவரது ஏரியாவில் குவாரி இல்லாததால் குளித்தலையில் இயங்கும் குவாரி கொடுக்கப்பட்டுள்ளதாம். 

குளித்தலை எம்எல்ஏ திமுகவைச் சேர்ந்த ராமர் என்பதால் குளித்தலை குவாரிக்கு யோகம் சந்திரசேகருக்கு அடித்துள்ளது. அதேபோல் லால்குடி அன்பில் பகுதியில் இயங்கும் குவாரி தஞ்சாவூர் எம்பி பரசுராமன் கட்டுப்பாட்டில் உள்ளதாம். காரணம் அந்த ஏரியா எம்எல்ஏவும் திமுக என்பதுதானாம். இந்த அனைத்து குவாரிகளுக்கும் ஏஇ, எஸ்டிஓ, இஇ என்று தனியாக தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கே போஸ்டிங் போட்டுள்ளார்களாம். 

அதேபோல் அரசியல்வாதிகளால் இந்த குவாரியில் எப்படி மணல் அள்ள முடியும். இயந்திரங்கள் வேண்டுமே, ஆகையால் சில இடங்களில் ஏற்கனவே அள்ளிய மணல் மாஃபியாக்களிடமே குவாரிகள் ஒப்படைக்கப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் செயல்படுத்தி கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் கை காட்டுபவர்களுக்கே விதிமுறைகளை மீறி மணல் கொடுக்கிறார்களாம். 

இது ஒருபுறம் இருக்க ஒன்றிய செயலாளர்களுக்கு எந்தவித கவனிப்பும் இல்லை என்று புலம்புகிறார்கள். குறிப்பாக பங்கு கூட கொடுப்பதில்லையாம். திருச்சியில் அடுத்த முறை தேர்தல் என்று ஏதாவது நடந்தால் திருச்சியில் உள்ள அமைச்சர், எம்எல்ஏ என்று யாரும் அவ்வளவு எளிதில் வெற்றி பெற முடியாதவாறு நிலையை உருவாக்கி வைத்து விட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தொகுதி மக்களை நேருக்கு நேர் சந்தித்த பேச முடியாத நிலையில் தவியாய் தவித்து கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அமைச்சர் வெல்மண்டி நடராஜன் மட்டும் பழைய மாஃபியா கும்பலுக்கு கொடுக்காமல் பெருகமணி குவாரியை முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜசேகர் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டாராம். 

அவரது சகோதரர் ராமநாதனும் அதைப் பார்த்துகிட்டு இருக்கிறாராம். இந்நிலையில் அண்மையில் குவாரியில் 25 டோக்கன் கேட்டு அதிமுக ஒன்றிய செயலாளர் அழகேசன் தகராறு செய்து ராஜசேகர் தரப்புடன் மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம். முக்கொம்பு ஏஇ கூறுகையில், ஒரு நாளைக்கு இருநூறு லாரிகளுக்குதான் அனுமதி தரப்படும். 

ஒரு லாரிக்கு 2 டன்தான் லோடு ஏற்றப்படுகிறது. வேறு எந்த விதிமீறலும் இல்லை.அனைத்து குவாரிளிலும் கரைவேட்டிகள் அனுமதியுடன் விதிமீறல்கள் நடந்து கொண்டேதான் உள்ளது. கூடிய விரைவில் எங்கோ ஒரு குவாரியில் வெட்டு குத்து கொலை என்று நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label